Pages

Monday, November 17, 2014

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் குவிக்க ஆலோசனை


பாடங்களை புரிந்துகொண்டு, கவனத்துடன் படித்தால் பொதுத்தேர்வில் மதிப்பெண்களை குவிக்கலாம் என, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் அறிவுரை கூறினர்.


தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில், புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த தினமலர் கல்விமலர் ஜெயித்துக்காட்டுவோம் கல்வித் திருவிழாவில், 10௦ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது குறித்து, மாணவர்களுக்கு, பாட வாரியாக ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.

பூங்குழலி பெருமாள் (தமிழ்)
பொதுத்தேர்வில் தமிழை முதல் தேர்வாக எழுதுகிறோம். தேர்வின்போது மாணவர்களுக்கு பயமும், பதற்றமும் வரக்கூடாது. சந்தோஷமான மனநிலையுடன் தேர்வை துவக்க வேண்டும். பதற்றம் ஏற்பட்டதால், பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கையெழுத்து நன்றாக இருந்தால் மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும்.

தேர்வில் இடைவெளி விட்டு எழுத வேண்டும். வாக்கிய பிழைகளை தவிர்க்க வேண்டும். விடைத்தாளில் வெளிப்பாடு நன்றாக இருந்தால் நிச்சயம் மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். ஒவ்வொரு மாணவர்களும் இஷ்டப்பட்டு படித்தால், அதிக மதிப்பெண் பெற முடியும். நமக்கு தெரியாமலேயே பிழைகள் ஏற்படலாம். படிப்பதுடன் தினமும், வீட்டில் எழுதிப்பார்ப்பது நல்லது. அடித்தல், திருத்தல் கூடாது. நம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் படித்தால், வெற்றி நிச்சயம்.

மரி கிளாடியஸ் பிலோமினா (ஆங்கிலம்)
ஆங்கில பாடம் கஷ்டமானது என நினைப்பது தவறு. மிகவும் எளிதான பாடம். விருப்பத்துடன் படித்தால், முழுமையான மதிப்பெண்களை பெற முடியும். தேர்வு எழுதுவதற்கு முன்பாக வினாத்தாளை ஒன்றுக்கு, இரண்டு முறை கவனமுடன் படித்துவிட்டு, பிறகு தேர்வு எழுத துவங்க வேண்டும். ஆங்கிலத்தை படிப்பதோடு மட்டுமில்லாமல், தினமும் எழுதி பார்க்க வேண்டும். முதல் தாளில் நாம் எளிதாக மதிப்பெண் பெற்றுவிடாலம். இரண்டாம் தாளில் அதிக கவனம் செலுத்தினோல் மட்டுமே, அதிக மதிப்பெண்களை பெற முடியும்.

வீரப்பன் (கணிதம்)
கணக்கு பாடம் மிக மிக ஈசியான பாடம். பொதுத்தேர்வில் நாம் சாதிக்க உதவும் பாடம் என்று கூட கூறலாம். இந்த பாடத்தில் சுலபமாக சென்டம் பெற்று விடலாம். கணக்கை புரிந்து கொண்டு, அடிக்கடி போட்டு பார்த்து பழக வேண்டும். நீச்சல், சைக்கிள், ஓவியம் கற்றுக்கொள்ள பயிற்சி தேவைப்படுவது போல், கணக்கு கற்றுக்கொள்ளவும், பயிற்சி முக்கியம்.
கணக்கு பாடத்தை பொறுத்த வரை பயம் இருக்கக்கூடாது. கணக்கு பாடத்தை கவனத்துடன் புரிந்து கொண்டு படித்தால், தவறு வராது. முழுமையான மதிப்பெண் கிடைத்துவிடும்.

பசுபதிராஜன் (அறிவியல்)
அறிவியல் பாடத்தை பொறுத்தவரை 55 மதிப்பெண்கள் வினாத்தாளிலேயே விடைகள் உள்ளது. வினாத்தாளை கவனமுடன் பார்க்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும், தேர்வில் அச்சம் இருக்கக்கூடாது. பதற்றம் ஏற்பட்டு, மதிப்பெண்ணை இழந்து விடக்கூடாது. ஆர்வமுடன் படித்தால், முழு மதிப்பெண் பெறலாம். கையெழுத்து மிக முக்கியம். மாணவர்களின் எழுத்து தெளிவாகவும், புரியும் படியும் இருக்க வேண்டும். அப்போது தான் முழு மதிப்பெண் பெற முடியும்.

பாலு(சமூக அறிவியல்)
சமூக அறிவியல் பாடம் எளிமையானது, மற்ற பாடங்களை போன்று அதிக சிரத்தை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாடத்தை புரிந்து கொண்டு படித்தால், ஈசியாக அதிக மதிப்பெண்களை பெற்றுவிடலாம். சமூக அறிவியல் பாட தேர்வை, சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுத வேண்டும். தலைப்பு போட்டு எழுத வேண்டும். அப்போதுதான், திருத்துவோருக்கும் வசதியாக இருப்பதுடன், முழுமையான மதிப்பெண்களை பெற முடியும். தேர்வுக்கு முன்பு, பாடத்தை முழுமையாக படித்துவிட்டு, அடிக்கடி ரிவிஷன் பார்ப்பது நல்லது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.