Pages

Sunday, November 2, 2014

"பிரதமருக்கு படிக்க நேரம் உள்ளது; பெட்டிக்கடைக்காரருக்கு இல்லை"

"பிரதமருக்கு படிக்க நேரம் உள்ளது; பெட்டிக்கடைக்காரருக்கு இல்லை என்பது சுறுசுறுப்பு இல்லாததையே காட்டுகிறது,” என தேவகோட்டையில் நடந்த புத்தக திருவிழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார்.


தேவகோட்டை நகரத்தார் மேல்நிலை பள்ளியில் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடந்த புத்தக திருவிழாவை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: புத்தக கண்காட்சி தற்போது புத்தக திருவிழா என பெயர் மாற்றப்பட்டுள்ளது. கண்காட்சி என்றிருந்தபோது வெறும் கண்களால் பார்த்து சென்றனர். திருவிழா என்பதே சரியானது.

ஆங்கிலேயர் ஆட்சியில் நாளேடு, வார, மாத இதழ்கள் மூலம் விடுதலை உணர்ச்சியை தூண்டுவர் என அச்சப்பட்டு, 1867-ல் பத்திரிகை புத்தக பதிப்புரிமை சட்டம் கொண்டு வந்தனர். சிந்தனை அறிவில்லாதவன் நமக்கு அடிமையாக இருப்பான். சுய சிந்தனை இருந்தால் விடுதலை உணர்ச்சி வரும் என்ற நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தியா விடுதலை ஆன பிறகும், இந்த சட்டம் இருப்பது துரதிருஷ்டவசமானது; 2017 ம் ஆண்டு வந்தால் இந்த சட்டத்துக்கு 150-வது ஆண்டு விழா.

2013 மார்ச் 31- வரை, பதிவு செய்த ஏடுகளின் எண்ணிக்கை 94,067. இதில் தின இதழ்கள் 12,511; வார, மாத, மாதமிரு ஏடுகள் 81,556. வாசிப்பு பழக்கம் குறையவில்லை என்பதை இது காட்டுகிறது. கடந்த ஆண்டு 8.43 சதவீதம் பதிவு அதிகரித்துள்ளது. இந்தி மொழி அதிகம் பேசுவதால், அந்த மொழி பதிப்புகளின் எண்ணிக்கை 37,091. ஆங்கில ஏடுகள் 12,634.

மொத்த மக்கள் தொகையான 120 கோடியில், இந்த ஏடுகளை வாங்குவோர் 40 கோடி 50 லட்சத்து 37 ஆயிரத்து 936. ஒரு புத்தகத்தை பல பேர் படிப்பர். வாங்கும் புத்தகத்தை படிக்காதவர்களும் உள்ளனர்.

பல வீடுகளில் புத்தகம் அலங்கார பொருளாக உள்ளது. நேரம் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். யார் சுறுசுறுப்பாக இருப்பார்களோ அவர்களுக்கு புத்தகம் படிக்க நேரம் உள்ளது. நேரம் இல்லை என்று சொல்பவர்கள் சுறுசுறுப்பாக இல்லை. நேரத்தை நாம்தான் ஆட்சி செய்ய வேண்டும்.

பிரதமருக்கு படிக்க நேரம் உள்ளது; பெட்டிக்கடைக்காரருக்கு படிக்க நேரம் இல்லை. சென்னையில் நடந்த புத்தக திருவிழாவில் 777 பதிப்பாளர்கள் கடை வைத்திருந்தனர். வாங்குபவர் இருப்பதால்தான் இத்தனை பதிப்பாளர்கள் உள்ளனர்.

எந்த நூல் அன்னிய மொழியில் மொழி பெயர்க்கும்போது அதே வீச்சில் விற்பனையாகிறதோ, அந்த நூல் மிகச்சிறந்த நூல். ஹாரிபார்ட்டர் புத்தகம் வெளி வருவதற்கு முன்தினம் மக்கள் வரிசையில் காத்திருந்தனர். அந்த நிலை, தமிழ் நூல்களுக்கும் வர வேண்டும். தமிழ் நூலுக்கு தவம் இருக்கும் நிலை வரவேண்டும். இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.