Pages

Sunday, November 2, 2014

மூத்தோர், இளையோர் இடைவெளி - காரணம் என்ன?

தமிழகத்தில், வரவர மூத்த குடிமக்களின் நிலைமை மிக பரிதாபகரமாக மாறி வருகிறது. வயதில் மூத்தோரை மதிப்பதில் துவங்கி அவர்களுக்கான வெளியை ஒதுக்குவது வரை, தற்போதைய சமூகம், மிக ஆபத்தான பாதையில் பயணிக்கிறது.


இத்தகைய சூழலில், சமூகத்தின் முன் உள்ள கடமை குறித்து, மூத்த குடிமக்கள் மன்றம் அமைப்பின் தலைவர், கேப்டன் சிங்கராஜாவிடம், 78, பேசியதில் இருந்து...

மூத்த குடிமக்கள் மன்றம் துவக்கியதன் நோக்கம்?

மூத்த குடிமக்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பது, அவர்களின் அறிவையும் ஆற்றலையும் இளையோருக்கு பகிர்ந்தளிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக, 2004ம் ஆண்டு, மூத்த குடிமக்கள் மன்றம் துவக்கப்பட்டது. இதில், அரசு, தனியார் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றோர் இருக்கின்றனர்.

மூத்தோர், இளையோரிடம் ஒத்து போகாததே, குடும்ப பிரச்னைகளுக்கு காரணம் எனும் குற்றச்சாட்டு உள்ளதே?

மூத்தோரிடமும் நிறைய குறைபாடுகள் உள்ளன. அவர்கள், இளையோராக வாழ்ந்த காலத்தில் செய்த செயல்கள்தான், உயர்ந்தவை என்றும், தற்காலத்தில் செய்யப்படும் செயல்கள் தாழ்ந்தவை என்றும் எண்ணுகின்ற மனநிலை நிறைய பேரிடம் உள்ளது. அதனால், இளையோர் செய்யும் செயல்களில் குற்றம் குறை கண்டுபிடித்து, சதாசர்வகாலமும் ஆலோசனை சொல்வோரை, இளையோருக்கு பிடிப்பதில்லை.

எப்போதும், காலத்திற்கு ஒவ்வாதவற்றை, தொண தொணவென பேசிக் கொண்டிருப்பது, குடும்பத்தில் உள்ள சிறார்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இன்னும், பெற்ற பிள்ளைகளிடம் கூட வறட்டு கவுரவம் பார்த்து கொண்டு, வீண் ஜம்பம் செய்வோரும் உண்டு. அவர்கள், தங்களின் வறட்டு கவுரவத்தை முதலில் விட்டுவிட்டு, இளையோரின் செயல்பாடுகளை, கால ஓட்டத்தோடு அணுகி, பாராட்டி பழக வேண்டும். பாராட்டுக்களால் தான், பாதி பிரச்னைகள் தீரும்.

இளைஞர்களிடம் உள்ள குறைகளாக, மூத்தோர் முன்வைக்கும் காரணங்கள் என்ன?

சமீப காலமாக, இளையோர் இடம்பெயர்ந்து வாழ்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. அதனால், வீட்டில் உள்ள பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் உள்ள பிணைப்பு வலுவிழக்கிறது. அரவணைப்பும், பாசமும் கிடைப்பதில்லை. தற்கால இளைஞர்களில் பலர், எளிய, நிறைவான வாழ்க்கையை பற்றி சிந்திப்பதில்லை. சொகுசு வாழ்க்கைக்கு மூத்தோர் இடையூறாக இருப்பதாக எண்ணி, அவர்களை, முதியோர் இல்லங்களில் விடுகின்றனர்.

மூத்தோரின் கண்பார்வை மங்கல், காது கேட்காமை போன்ற உடல்நல குறைகளை, எள்ளி நகையாடுவதையும், ஏளனப்படுத்துவதையும், இளையோர் பெருமையாக நினைக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை பணம் சார்ந்ததாக மட்டுமே மாறிக்கொண்டிருப்பது வேதனைக்குரியது.

மூத்த குடிமக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் என்ன?

மூத்த குடிமக்கள் முடங்குவதை தடுப்பதே, எங்களின் முதல் நோக்கம். மூத்த குடிமக்களின் அறிவை, சமூகத்திற்கு பயனுள்ளதாக மாற்ற அவர்களை ஒருங்கிணைப்பதில் நாங்கள் முனைகிறோம். ஓய்வு பெற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள், கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, மூத்தோருக்கும், இளையோருக்கும் பயனளிக்கும் வகையில், பள்ளி, கல்லூரிகளில் மருத்துவ முகாம், வழிகாட்டி ஆலோசனை முகாம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறோம். அப்போது, இளைஞர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இடையில் நல்லுறவு ஏற்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கு, அரசு செய்ய வேண்டிய கடமைகள் என்ன?

தேசிய, குழந்தைகள், பெண்கள் ஆணையம் போல், மூத்த குடிமக்களுக்கான ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்கள், மூத்த குடிமக்களை பற்றிய புள்ளி விவரங்களை சேகரித்து, அவர்களை ஒவ்வொரு மாதமும் நேரில் சந்தித்து, அவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும். பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். அதன் மூலம், அவர்களின் உடல் நல பிரச்னைகளுக்கு, தற்காலிக ஓய்வு கிடைக்கும்.

பூங்காக்கள், மிருக காட்சி சாலைகள், அரசு விழாக்களில் முதியோருக்கு இலவச அனுமதியும், இருக்கைகளும் ஒதுக்கப்பட வேண்டும். அப்படி ஒதுக்கும் பட்சத்தில், மனம் சார்ந்த பிரச்னைகள் தீரும். சுற்றுலா துறையில், சலுகை அளிக்க வேண்டும். கூட்டுக்குடும்பத்தை ஊக்குவிக்கும் விதமாக, வரி விலக்கு அளித்து, கூட்டுக் குடும்பத்தின் நிலையை கண்காணிக்க வேண்டும். காலாவதியான மூத்த குடிமக்களின் வங்கி சொத்துக்களையும், பங்கு முதலீடுகளையும், மூத்தோரின் நலனுக்காக செலவழிக்க வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கு, உங்களின் ஆலோசனைகள்?

எந்தச் சூழலிலும், உங்களை தனிமைப்படுத்தி, முடங்கி விடாதீர்கள். முடக்கம்தான், முதல் மனநோய். ஆன்மிகத்தில் ஆர்வம் உள்ளவர்கள், புனித நூல்களை படித்து, ஆலயங்களுக்கு சென்று, அதில் உள்ள கருத்துக்களை பலரிடம் சொல்லலாம். தம் வீட்டருகில் இருக்கும் குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கலாம். முதியோர் இல்லங்களுக்கு சென்று உதவலாம். கவனிப்பாரின்றி கிடக்கும் ஏழை முதியோருக்கு, ஆலோசனை வழங்கி, அரசின் பலன்களை பெற்று தரலாம். இப்படி, தத்தமது விருப்பத்திற்கேற்ப தொண்டு செய்து, ஓய்வு காலத்தை பயனுள்ளதாக மாற்றி கொள்ளலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.