Pages

Saturday, November 22, 2014

மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது அடியாட்களை அழைத்துவந்து கொடூர தாக்குதல்!

வகுப்பறையில் மாணவனை கண்டித்ததற்காக, அடியாட்களை அழைத்து வந்து ஆசிரியரை தாக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வருகிறது லயோலா மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி. இங்கு பாஸ்கர் என்பவர் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று அவர் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, அர்னால்டு என்ற மாணவன் பாடத்தை கவனிக்காமல் சக மாணவனுடன் அரட்டை அடித்தபடி விசில் அடித்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது.  இதை கவனித்த பாஸ்கரன் அந்த மாணவனை கண்டித்ததாக சொல்லப்படுகிறது.


சிறிது நேரத்தில் உடல்நிலை சரியில்லை எனக் கூறி மாணவன் அர்னால்டு பள்ளியிலிருந்து வெளியேறியிருக்கிறான். இதையடுத்து பிற்பகலில் வழக்கறிஞர்கள் எனக் கூறிக்கொண்டு வந்த 3 நபர்கள் ஆசிரியர் பாஸ்கரை பார்க்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றனர். பாஸ்கர் வந்ததும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அப்போது வெளியிலிருந்து 10க்கும் மேற்பட்டோர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் பாஸ்கரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பாஸ்கர் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பாஸ்கர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிய பள்ளி தரப்பிலிருந்து கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் வழக்கு பதிய மறுத்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே சிகிச்சையில் இருந்த ஆசிரியர் பாஸ்கர் இன்று காலை சுயநினைவிழந்தார். இதையடுத்து பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பாஸ்கரனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோடம்பாக்கம் பாலத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் ஆசிரியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.
அதன்படி மாணவன் அர்னால்டு உள்ளிட்ட 17 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். சம்பவம் தொடர்பாக 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.