Pages

Monday, October 27, 2014

தன் அறிவுக்கேற்றாற்போல் தேர்வெழுதும் மாணவர், மனப்பாட மாணவரை விட பின்தங்கி விடுகிறார்"

சென்னை பல்கலையில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி, மாணவர்களுக்கான ஆலோசனை - வழிகாட்டி மையங்களில் செயல்பட்ட, அனுபவம் மிக்க சமூகப்பணி துறை தலைவரும், உளவியல் பேராசிரியருமான சுவாமிநாதனிடம் பேசியதில் இருந்து.

தற்கால மாணவர்கள் பற்றி?
கடுமையான போட்டிகளுக்கிடையில் தகவல் தொழில்நுட்ப உலகத்தில், உலக மயமாக்கலின் மத்தியில், உளவியலாக புறக்கணிக்கப்படும் தலைமுறையினராகவே தற்கால மாணவர்கள் எனக்கு தென்படுகின்றனர்.
மாணவர்களின் ஆரம்பகால உளவியல் சிக்கல்கள் என்னென்ன?
சமீபமாக மாணவர்களின் சிந்திக்கும் அறிவுக்கும், நினைவு திறனுக்கும் இடையில் பெரும் இடைவெளி ஏற்பட்டு வருகிறது. ஒரு பத்தியை புரிந்துகொண்டு, தன் அறிவுக்கேற்றாற்போல் தேர்வு எழுதும் மாணவர், மனப்பாடம் செய்து தேர்வெழுதும் மாணவரை விட பின்தங்கி விடுகிறார். அதுதான் முதல் சிக்கல்.
பள்ளியில் மனப்பாடம் செய்து தேர்வெழுதி அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்கள், குறிப்பாக மாணவியர், உயர்கல்வியில் செயல்முறை தேர்வில் பின்தங்கி விடுகின்றனர். இதனால் அவர்கள் சந்திக்கும் உளவியல் சிக்கலுக்கும், பதின் பருவத்துக்குமான கவுரவ சிக்கலாக உருவெடுத்து, அவர்களின் வாழ்வில் பெரும் பாதிப்புகளை உண்டாக்குகின்றன.
பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் உறவுமுறை பற்றி?
பெற்றோர் தனக்கான உலகத்தில், தன் அறிவுக்கான தளத்தில் எது சரியெனப்படுகிறதோ அதை பின்பற்ற வேண்டும் என பிள்ளைகளை வற்புறுத்துகின்றனர். மாணவர்கள் அவர்களுக்கான உலகத்தில் அவர்களுக்கான அறிவுதளத்தில் யோசித்து, தம் சுபாவத்துக்கும், தம் எதிர்காலத்திற்கும் ஒத்து வராதவற்றை ஏற்றுக்கொள்ள தயங்குவதும், எதிர்ப்பதும் அதிகம் நிகழ்கின்றன.
குறிப்பாக, மேல்நிலை பள்ளி, கல்லுாரி பருவத்தில் படிப்பை தேர்ந்தெடுப்பதில் அதிகமாக இந்த முரண்கள் ஏற்படுகின்றன. ஆசிரியர்கள் தங்களின் கல்வி நிலையில் இருந்து மாணவர்களை அளக்கின்றனர். அதனால் பல வேளைகளில் மாணவர்களை அச்சுறுத்துன்றனர்.
ஆனால் மாணவர்கள் புதிதுபுதிதாக கற்றுக்கொண்டே இருக்கின்றனர். அதேபோல், கற்காத ஆசிரியர்களை மாணவர்கள் புறக்கணிக்கின்றனர். மாணவர்களின் தேடுதலையும், அறிவையும்அங்கீகரித்து ஊக்கமளிக்கும் பெற்றோரையும், ஆசிரியரையும் மாணவர்கள் கொண்டாடவே செய்கின்றனர்.
மாணவர்களின் விருப்பத்துக்கெதிராக பெற்றோர் செயல்பட காரணம் என்ன? அதனால் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன?
பெற்றோரின் சமூக அந்தஸ்து, வேலை வாய்ப்பு, ஊதிய விகிதம், வரண் தேடுவதில் உள்ள எதிர்பார்ப்பு இவற்றை கணக்கிட்டு, தொழில்முறை படிப்புகளுக்குதான் பெரும்பாலான பெற்றோர் விருப்பம் தெரிவிக்கின்றனர். சுயவிருப்பமின்மை, தன் கற்பனைக்கு ஒவ்வாத படிப்பால், வகுப்பறை தேர்வறைகளில் மாணவர்கள் சோர்வடைகின்றனர். கட்டாய கல்வியால் மன அழுத்தத்திற்கு ஆளாகி, உடல் நலத்திலும் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக மாணவியர், ஒழுங்கில்லா மாதவிலக்கு உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர். படித்து முடித்தபின், தமக்கு விருப்பமில்லாத துறையில் வேலை கிடைப்பதால், உயர் பதவியில் உள்ளோர் தமக்கு கீழ் உள்ளோரிடம் அனுசரணை இல்லாதோராக தம் காலத்தை கழிக்கின்றனர். வேலையில் ஏற்படும் விரக்தியும், வெறுப்பும் வீட்டில் உள்ளோரிடம் வெளிப்பட்டு மனமுறிவு வரை செல்கிறது. பலர் மனநோயாளிகளாகவும், குற்றவாளிகளாகவும் மாறி பெற்றோரின் அந்தஸ்துக்கு தலைகீழாக வாழ்கின்றனர்.
அப்படியானால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
பிள்ளைகளின் விருப்பங்களையும், செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எந்த பாடத்தில் அதிக மதிப்பெண்களை தொடர்ந்து வாங்குகின்றனரோ அந்த பாடத்துக்கான தகவல்களை திரட்டி கொடுப்பது, அந்த துறை சார்ந்தவர்களை சந்திக்க வைப்பது உள்ளிட்ட பணிகளை பெற்றோர் செய்யலாம். மாதத்திற்கு ஒரு முறையேனும் பிள்ளைகளின் பள்ளிக்கோ, கல்லுாரிக்கோ சென்று அவர்களின் நடவடிக்கைகள் பற்றி ஆசிரியர் மூலமாக அறிந்து அவர்களின் வளர்ச்சியில் பங்கேற்கலாம்.
மாணவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்?
மாணவர்கள், குறிப்பாக உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் தங்களுக்கான இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதை அடைவதற்கான படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். தன்னை எதிர்க்கும் பெற்றோர், சுற்றத்தாரை தன் தீராத முயற்சி, ஆர்வம், தேடல், இடைவிடாத உழைப்பு, வித்தியாசமான செயல் ஆகியவற்றால் தன் தேர்வு சரிதான் என அவர்களிடம் நிரூபிக்க வேண்டும்.
அதற்கு சகிப்பு தன்மை, திறமை, காலம் ஆகியவை தான் பதிலளிக்கும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் தருக்க பகுப்பாய்வு, விமர்சன படைப்பாக்க கவனிப்பு, கேட்கும் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1 comment:

  1. ஆசிரியர்ககளுக்கான ஒரு மிகப்பெரிய வலைதளம் www.gurugulam.com கல்வி வேலைவாய்ப்பு இலவச ஆன்லைன் கோச்சிங் இலவச ஆன்லைன் டெஸ்ட் TNPSC TET PG TRB என அனைத்து தேர்வுகளுக்கும் மிகப்பெரிய வழிகாட்டி

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.