Pages

Monday, October 27, 2014

ஆசிரியர்கள் சிறப்புநிலை குறித்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: கல்வி துறை செயலாளருக்கு நீதிபதிகள் கண்டனம்

சென்னை ஐகோர்ட்டில், சிரோமணி உட்பட பல ஆசிரியர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தனர். அதில், ‘2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் நீண்ட கால பணி செய்யும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கவேண்டும். ஆனால், சில ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டதால், பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீண்ட கால பணி செய்துள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்க உத்தரவிட்டது. ஆனால், ஆசிரியர்கள் சிலருக்கு மட்டுமே சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உள்ளிட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சபீதா கோர்ட்டில் ஆஜராகினார். அரசு தரப்பில் வக்கீல் கிருஷ்ணகுமார், நீண்ட கால பணி செய்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டு விட்டது. இந்த கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தப்பட்டு விட்டது’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், செயலாளர் சபீதாவை அருகில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்து சில கேள்விகளை கேட்டனர். அவற்றின் விவரம் பின் வருமாறு:–

நீதிபதிகள்: உங்களை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடும்படியான ஒரு சூழ்நிலையை ஏன் உருவாக்கினீர்கள்? உங்களை போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இதுபோல் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட எங்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால், ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த ஏன் கால தாமதம் செய்கிறீர்கள்? பள்ளிக்கல்வித்துறை செயலாளராகி உங்கள் மீது எத்தனை கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் இந்த ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்று தெரியுமா?

சபீதா : பல வழக்குகள் உள்ளது.

நீதிபதிகள்: ஏன் இந்த நிலை? இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவை அமல்படுத்துங்கள். அல்லது அந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யுங்கள். இதை செய்யாமல் இருப்பதால், இப்படி வழக்குகள் வருகிறது. உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம். இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.