Pages

Thursday, October 2, 2014

அதர்மம் என்ற சூழ்ச்சி அகன்று தர்மம் நிலைநாட்டப்படும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆயுத பூஜை, விஜயதசமி திருநாள் வாழ்த்து

அதர்மம் என்ற சூழ்ச்சி அகன்று தர்மம் நிலைநாட்டப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆயுத பூஜை, விஜயதசமி திருநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாகவும், செல்வத்தைத் தரும் திருமகளாகவும், துணிவைத் தரும் மலை மகளாகவும் விளங்கும் அன்னையை, பெண்மையைப் போற்றி வணங்கும் விழா நவராத்திரி திருவிழா. மக்களின் துன்பம் நீக்க எண்ணிய அன்னை சக்தி ஒன்பது நாட்கள் மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் போரிட்டு வதம் செய்த நாள் விஜயதசமி திருநாள்.

 ஒன்பது நாட்கள் அன்னை சக்தியை வழிபடுவதால் நவராத்திரி என்ற சிறப்புப் பெயர் பெற்றது. நவராத்திரி நாட்களில் தேவியர் மூவரையும் மனமார வணங்கினால் வீரம், செல்வம், கல்வி என அனைத்து நன்மைகளையும் பெறலாம்.

நவராத்திரி திருவிழா என்பது ஆன்மிக விழா மட்டுமல்ல, கைவினைஞர்களின் கைவண்ணத்திற்கு பெருமை சேர்க்கும் விழா. உழைப்பின் உன்னதத்திற்கு மதிப்பளிக்கும் விழா ஆகும்.

விஜயதசமி தினத்தன்று கல்வி, கலை, தொழில்கள் ஆகியவற்றை தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கும் திருநாள் ஆகும். விஜயதசமி தினத்தன்று தீயவைகள் அகன்று நல்லவைகள் நடக்கட்டும்.

 தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும் என்பது இயற்கை நியதி. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட்டால் அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று தர்மம் நிலைநாட்டப்படும்.

 தமிழக மக்கள் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரிய வேண்டும் என  உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியை போற்றி வணங்கி, அனைவருக்கும் ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.