Pages

Tuesday, September 23, 2014

மதுரை மாவட்ட அரசு பள்ளிகளில் 93 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை

மதுரை மாவட்ட அரசு பள்ளிகளில் 93 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், அரசு பள்ளிகளின் பலநாள் கனவு நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 உட்பட அறிவியல் பாடங்களுக்கான செய்முறை வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்துவதற்கு ஆய்வக உதவியாளர்கள் பணி மிக முக்கியம். ஆய்வகங்கள் மற்றும் உபகரணங்களை பராமரிப்பது இவர்களின் பொறுப்பு.

இப்பணியிடங்கள் பல பள்ளிகளில் காலியாக இருந்ததால் ஆய்வகங்கள் சரிவர பராமரிப்பின்றி பெயரளவில் உள்ளன. அரசு பள்ளிகளில் இப்பணியிடங்களை நிரப்புவதற்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டன. இதன் எதிரொலியாக, மாநிலம் முழுவதும் 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் 93 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், மதுரை, மேலுார், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களில், பதிவறை எழுத்தர், அடிப்படை பணியாளர்களுக்கு பதவி உயர்வு மூலம் 26 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 67 பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில், இதற்கான பதிவு மூப்பு பட்டியலை கல்வித்துறை கோரியுள்ளது. பட்டியல் கிடைத்ததும் மீதமுள்ள 67 இடங்கள் நிரப்பப்படும்.

முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், "பதவி உயர்வு அடிப்படையில் மேலுார் கல்வி மாவட்டத்தில் 9, உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 5, மேலுார் கல்வி மாவட்டத்தில் 12 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 67 பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பட்டியல் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.