பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் குறித்து, காலைக்கதிர் நாளிதழில் வெளியான செய்தி பொய்யானது என, மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் கையெழுத்திட வேண்டும் என, உதவி பேராசிரியர்கள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில், பெரியார் பல்கலை உறுப்பு கல்லூரி, கடந்த, மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில், தமிழ், ஆங்கிலம், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் ஆகிய துறை உள்ளன. இதில், 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, பாடம் நடத்த பல்கலையால் தற்காலிக உதவி பேராசிரியர், 21 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு, முதல்வராக பணியாற்றி வந்த மருதமுத்து, சேலம் பெரியார் பல்கலைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக பெரியார் பல்கலையில், தாவரவியல் துறையில் பணியாற்றி வந்த அமைச்சர் பழனியப்பன் உறவினரான செல்வம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரிக்கு பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டார்.
டார்ச்சர்
கல்லூரி முதல்வராக செல்வம் பொறுப்பேற்றதும், அங்கு பணியாற்றும் உதவி பேராசிரியர் சிலருடன் கை கோர்த்து கொண்டு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், உதவி பேராசிரியர்களுக்கும், டார்ச்சர் கொடுத்து வந்தார். இதை தட்டிக்கேட்ட உதவி பேராசிரியர்களை, உங்களை, அமைச்சரிடம் சொல்லி வேலையை விட்டு தூக்கி விடுவேன் என செல்வம் மிரட்டியதாக புகார் எழுந்தது. அதுமட்டுமின்றி, மாணவ, மாணவியரையும், பேராசிரியர்களையும் தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.
இதையடுத்து, கல்லூரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் சிலருடன் சேர்ந்து, அமைச்சர் பழனியப்பனிடம், கல்லூரி முதல்வர் குறித்து புகார் கொடுத்தனர். இதுகுறித்து, நேற்று முன்தினம், காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுகிழமை இரவு அவசரமாக அனைத்து பேராசிரியர்களுக்கும், ஃபோன் மூலம், நாளை (நேற்று)பல்கலை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர், பேராசிரியர்களிடமும், மாணவியரிடம் புகார் சம்பந்தமாக நேரடி விசாரணைக்கு கல்லூரிக்கு வருகிறார். ஆகவே, அனைத்து பேராசிரியர்களும், காலை 8 மணிக்கு கல்லூரியில் ஆஜராக வேண்டும் என, கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
ஏமாற்றம்
நேற்று காலை, 8 மணிக்கு பேராசிரியர்கள் அனைவரும் கல்லூரியில் ஆஜராகினர். ஆனால், கல்லூரியின் பொறுப்பு முதல்வர் செல்வம், பல்கலை பணி என எழுதி வைத்துவிட்டு, கல்லூரிக்கு வரவில்லை. அதேபோல், துணைவேந்தரும் வராததால், மாணவ, மாணவியரும், பேராசிரியர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆனால், கல்லூரி உதவி பேராசிரியர் இருவர், கல்லூரி மாணவியரிடம் சென்று, அமைச்சரிடம் புகார் கொடுக்க சென்றவர் யார், யார் என கேட்டும், உங்களை அழைத்து சென்றவர்கள் யார் என கேட்டும் மிரட்டி உள்ளனர்.
மேலும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைத்து மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய உள்ளதாகவும், அவர்கள் மிரட்டல் விடுத்ததால், மாணவ, மாணவியர் பீதியில் உள்ளனர். கல்லூரி முதல்வர் செல்வம் குறித்து, காலைக்கதிர் நாளிதழில் வெளியான செய்தி பொய்யானது எனவும், அதற்கும், முதல்வர் செல்வத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என எழுதி தாருங்கள் என, மாணவ, மாணவியரை, உதவி பேராசிரியர்கள் மிரட்டி உள்ளனர். மாணவ, மாணவியர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்.
முதல்வருக்கு மனு
இதற்கிடையே இப்பிரச்சனையை மாணவர் இயக்கம் கையில் எடுத்துக்கொண்டு, மாணவ, மாணவியரை மிரட்டிய பேராசிரியர்கள் குறித்தும், முதல்வர் செல்வம் குறித்தும் பல்வேறு தகவல்களை திரட்டி, முதல்வருக்கும், கவர்னருக்கும் மனு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.