Pages

Tuesday, August 26, 2014

பணி நியமன ஆணை கிடைத்தும் பணியில் சேரமுடியாத தமிழ்வழி தேர்வர்கள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று, பணி நியமன ஆணை கிடைத்தும், தமிழ்வழியில் பயின்ற தனித்தேர்வர் என்ற காரணத்திற்காக, பணியமர்த்தப்படாத பலரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.


கடந்த 2013 ஆக., 25 ல், 3550 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு நடந்தது. லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதினர். 2014 மார்ச் 5 ல், முடிவுகள் வெளியானது. வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் 26 முதல், இட ஒதுக்கீட்டிற்கு ஏற்ப, மே 6 வரை கவுன்சிலிங் நடந்தது. அதில், நியமன ஆணை பெற்றவர்களுக்கு பணி ஒதுக்கீட்டின்படி, அந்தந்த துறை அலுவலகங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

அதன்படி, பலர் ஜூன் மாதம் பணியில் சேர்ந்து, 2 மாத சம்பளமும் பெற்று விட்டனர். தமிழ்வழிக் கல்வி மூலம் 10 ம் வகுப்பு தனித்தேர்வு எழுதி, குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அவர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு பணி நியமன ஆணையுடன் சென்ற போது, இவர்கள் குறித்த தகவல் வரவில்லை எனக்கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பலரும், சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தை போனில் தொடர்பு கொண்டும், நேரிலும் சென்றும் கேட்டபோது, தனித்தேர்வில் தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீடு எனக்கூறி, அரசின் உத்தரவு பெற்ற பின்தான், உங்களது பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் என கூறி விட்டனர். இதனால், பரமக்குடியில் மட்டும் 3 பேர் பணி நியமன ஆணை கையில் இருந்தும், பணியில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: இதற்கு முன் நடந்த அனைத்து தேர்வுகளிலும், எங்களைப் போல் வெற்றி பெற்றவர்களை எந்த சிக்கலுமின்றி பணியில் அமர்த்தியுள்ளனர். குடும்பச்சூழல் காரணமாக, தமிழ் வழிக் கல்வியில் படித்து, தனித்தேர்வு எழுதி பகல், இரவு பாராமல் படித்து, டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வில் வெற்றி பெற்றும், வேலை கிடைக்காததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இருந்த தொழிலையும் விட்டுவிட்டு, பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனர்.

2 comments:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.