Pages

Monday, August 18, 2014

மாணவியை கற்பழித்து கொன்றதாக வதந்தி: பள்ளியில் பெற்றோர் முற்றுகை

பல்லாவரத்தில் செயின்ட் தெரசா பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு ஒரு மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. சில தினங்களாகவே இந்த வதந்தி உள்ளது.


இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் கேட்டனர். அதற்கு, ‘‘இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்க வில்லை. பெற்றோர், சக மாணவிகள் யாரும் அது போன்ற புகார்களை தெரிவிக்கவில்லை. சமூக விரோதிகள் யாரோ பள்ளிக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் இது போன்ற வதந்திகளை பரப்புகிறார்கள்’’ என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வதந்தியை பரப்புகிறவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும் என்று போலீசிலும் பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை ஆயிரத்துக்கும் அதிகமான பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். ‘மாணவி தொடர்பான விஷயங்கள் மறைக்கப்படுகின்றன. உண்மை தெரிய வேண்டும்’ என்று பலர் கூறினார்கள்.

‘எந்த சம்பவமும் நடக்க வில்லை. யாரும் புகார் தெரிவிக்கவில்லை’ என்று பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டது. என்றாலும் அந்த பள்ளியை சூழ்ந்து கொண்டனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமானது. போலீசார் வர வழைக்கப்பட்டனர்.

முற்றுகையில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினார்கள். அவர்களை சமாதானம் செய்ய நடந்த முயற்சிகளும் பலிக்கவில்லை.

இதற்கிடையே அங்கு நின்ற பெற்றோர் திடீரென்று பள்ளியின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். 100–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பள்ளி வாயில் இழுத்து மூடப்பட்டது.

மறியல் காரணமாக அந்த பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் சரவணன், கூடி இருந்தவர்களை சமாதானப்படுத்தினார். மாணவி தொடர்பாக பரவி இருப்பது வெறும் வதந்தி என்று கூறினார்.

என்றாலும் போராட்டம் தொடர்ந்து பெற்றோர் பிரதிநிதிகள் சிலர் பள்ளி நிர்வாகத்தினரிடம் பேசுவதற்காக பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.