Pages

Monday, August 18, 2014

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் சொந்த செலவில் ஐ.டி. கார்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆ.குரும்பப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இப்பகுதியை சுற்றியுள்ள காளைகவுண்டம்பட்டி, ஆலத்தூர், களத்துப்பட்டி, குரும்பப்பட்டி, குரும்பப்பட்டி காலனி, புங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 103 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. இங்கு ஒரு தலைமை ஆசிரியர், 6 உதவி ஆசிரியர்கள் உள்ளனர். இங்கு உதவிஆசிரியராக இருக்கும் கேசவன் முயற்சியால் இப்பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தனியார் பள்ளியில் வழங்கப்படுவது போல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த அடையாள அட்டைகளை இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளே தயாரித்துள்ளனர். ஆசிரியர் கேசவன் கூறியதாவது: அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளி மாணவர்களை பார்க்கும்போது மனதளவில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குகிறது. இதைப்போக்கும் விதமாக முதற்கட்டமாக, தனியார் பள்ளிகளை போல் இவர்களுக்கும் அடையாள அட்டை தயாரித்து வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதுவும் மாணவ, மாணவிகளை கொண்டே இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் இதற்கு ரூ.100 வசூல் செய்யும் நிலையில், எங்களுக்கு ஒரு அட்டை தயாரிக்க ரூ.10 மட்டுமே செலவானது. 

இதே பள்ளியில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சரோஜினி கஸ்தூரிராஜாவை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து பல அரசு பள்ளிகள் மூடுவிழா காணும் நிலையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் சொந்த செலவில் அடையாள அட்டை வழங்கியுள்ளதை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

2 comments:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.