திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில் உள்ள 70 பணியிடங்களில், 43 இடங்கள் காலியாக உள்ளன. மேலும், அடிப்படை வசதிகளும் இல்லாததால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
அரசு, உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக, கல்லுாரி முதல்வரிடம் மாணவர்கள் தெரிவித்தனர்.
திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியில், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கணிதம், வணிகவியல் (பொது), இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில், இளங்கலை, முதுகலை பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. வணிகவியல், கணினி பயன்பாடு ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, இளங்கலை பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
இதுதவிர, வரலாறு, பொருளியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவுகளில், இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டப் படிப்பு கற்பிக்கப்படுகிறது. இந்த பாடப்பிரிவுகளில், மொத்தம், 3,100 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இந்த நிலையில், கல்லுாரியில் பயிற்றுவிக்கும் துறை பாடப்பிரிவுகளுக்கு போதிய பேராசிரியர்கள் இல்லை. குறிப்பாக, தெலுங்கு, புள்ளியியல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளுக்கு பேராசிரியர்களே இல்லை.
மீதமுள்ள, பாடப்பிரிவுகளிலும், 52 பேராசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், தற்போது 25 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். 27 இடங்கள் காலியாக உள்ளன. இதுதவிர, அலுவலக பணியாளர்கள், உதவியாளர்கள், துப்புரவு தொழிலாளர் என, 18 பணியிடங்களில், 16 இடங்கள் காலியாக உள்ளன.
முதல்வரிடம் புகார்: மேலும் கல்லுாரி வளாகத்தில், குடிநீர் தட்டுப்பாடு, கழிப்பறைகளில் துர்நாற்றம் போன்ற அடிப்படை பிரச்னைகளை தீர்க்க முடியாமல், கல்லுாரி நிர்வாகம், திணறி வருகிறது. கல்லுாரியில் குடிநீர் வசதி, காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கல்லுாரி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும், கழிப்பறையை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என, மாணவர்கள் தரப்பில் கல்லுாரி முதல்வரிடம் புகார் மனு கொடுத்தனர்.
மேற்கண்ட அடிப்படை வசதிகளை 10 நாட்களுக்குள் செய்து தராவிட்டால், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.
பரிந்துரை கடிதம்: இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சக்கரவர்த்தி கூறுகையில், "மாணவர்கள் கொடுத்த புகாரை தொடர்ந்து, பேராசிரியர்களை நியமிப்பதற்கு, கல்வியியல் துறை இயக்குனருக்கும், நிழற்குடை மற்றும் குடிநீர் வசதி அமைப்பதற்கு, ஒன்றிய நிர்வாகத்திற்கும், கழிப்பறைகளை சீரமைப்பதற்கு பொதுப்பணி துறைக்கும் பரிந்துரை கடிதம் எழுதியுள்ளேன்.
கல்லுாரியில் தற்போது 25 நிரந்தர பேராசிரியர்களும், 20 கவுரவ பேராசிரியர்களும் (தொகுப்பூதியம்) பணியாற்றி வருகின்றனர். கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு தற்காலிகமாக இருவர் நியமிக்கப்படுவர்" என்றார்.
காலி பணியிடங்கள் விவரம்
துறை - மொத்த காலி பணியிடங்கள் - பணியிடம்
தமிழ் - 4
தெலுங்கு - 1 - 1
ஆங்கிலம் - 9 - 6
வரலாறு - 9 - 5
பொருளியல் - 5 - 1
கணிதம் - 6 - 1
புள்ளியியல் - 1 - 1
நிறுமனச் செயரியல் - 5 - 3
வணிக நிர்வாகம் - 2 - 1
இயற்பியல் - 4 - 3
கணினி அறிவியல் - 4 - 4
உடற்கல்வி - 2 - 1
அலுவலக பணியாளர்கள் - 18 - 16
மொத்தம் - 70 - 43
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.