Pages

Wednesday, June 25, 2014

கல்வி உதவி தொகை கையாடல்: நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை ஐகோர்ட்டில், கீழ்மருவத்தூரை சேர்ந்த கண்ணன் கோவிந்தராஜன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணியாற்றும் 77 தலைமை ஆசிரியர்கள், 2011-12 கல்வியாண்டுகளில் ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவி தொகையை வழங்காமல் கையாடல் செய்துள்ளனர். இதையடுத்து, இந்த 77 தலைமை ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை கடந்த 2012–ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதி உத்தரவிட்டது.


இதன்பின்னர், அந்த தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை விசாரணை நடந்தது. பின்னர், அந்த ஆண்டு மார்ச் மாதம் 77 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட்டது. அவர்கள் மீது குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வி துறையிடம் விளக்கம் கேட்டேன்.

அதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை 77 தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறியது. ஆனால், தலைமை ஆசிரியர்களுக்கு எப்படி மீண்டும் பணி வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

எனவே மாணவர்கள் உதவி தொகையை கையாடல் செய்த 77 தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை எடுக்கும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் மனுவுக்கு வருகிற ஜூலை 9-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.