Pages

Friday, June 20, 2014

தமிழ் பாடத்தில் தோல்வியடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், மற்ற பாடங்களை காட்டிலும், தமிழ் பாடத்தில் தோல்வியடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது, வரும் கல்வியாண்டிலும் தொடராமல் இருக்க, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.


கோவை மாவட்டத்தில், நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 43 ஆயிரத்து 49 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 41 ஆயிரத்து 154 பேர் தேர்ச்சி பெற்றுள்னர். இதேபோல், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 36 ஆயிரத்து 573 மாணவர்கள் பங்கேற்றதில், 34 ஆயிரத்து 705 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில், தமிழ் பாடத்தில் 1,895 மாணவர்களும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,868 மாணவர்களும், தோல்வியை தழுவியுள்ளனர்.

இது, மற்ற பாடங்களில் தோல்வியடைந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், இரு மடங்கு அதிகரித்துள்ளது. பிற பாடங்களில் சென்டம் எடுத்தவர்களும், மொழிப்பாடத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது தேர்வு முடிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாவட்ட அளவில் ரேங்க் பெற்ற மாணவர்கள் கூட, கட்-ஆப் மதிப்பெண்களை குறி வைத்து முக்கிய பாடத்துக்கு செலுத்திய அக்கறை, மொழிப்பாடத்தில் காட்டவில்லை. இது வரும் கல்வியாண்டிலும் தொடர்ந்தால், தமிழ் பாடத்தில் தோல்வியை தழுவுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதற்காக, தமிழ் பாடத்தில், இலக்கணம், மொழி உச்சரிப்பு, வார்த்தைகளின் பொருள் புரிதல் குறித்து, ஆசிரியர்கள் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். மற்ற பாடங்களை போல, தமிழ் பாடத்திற்கும் சிறப்பு வகுப்புகள், தேர்வுகள் வாயிலாக, அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் வலுத்துள்ளது.

கல்வியாளர்கள் சிலர் கூறுகையில், "பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளிகளிலே முக்கிய பாடங்களுக்காக மட்டும், அதிக நேரத்தை செலவிட அனுமதிக்கின்றனர். இதை தொடர்ந்து வலியுறுத்தி, கற்பிப்பதாலே மொழிப்பாடங்களில் தோல்வியை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தவறான நடைமுறை. மொழிப்பாடத்தை புரிந்து கொள்ளாத மாணவர்களால், தங்களது சுய மதிப்பீட்டு திறனை வளர்த்து கொள்ள முடியாது" என்றனர்.

முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில், "பொதுத்தேர்வு முடிவுகளுக்கு ஏற்ப ஆண்டுதோறும், குறிப்பிட்ட சில பாடங்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து, தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தி வருகிறோம். இந்தாண்டு, காலாண்டு தேர்வு முதலே, தமிழ்பாடத்தில் தோல்வியை தழுவும் மாணவர்கள் மீது, சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படும்" என்றார்.

1 comment:

  1. tamil padathil 100kku100 enru doop vittavargal yar nangala athigarigala. gavanikka.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.