Pages

Friday, June 20, 2014

90% தேர்ச்சி பெற்ற, தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் இல்லை!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 சதவீதம் தேர்ச்சி பெற்ற, தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால், மாணவர்கள் மரத்தடியில் பாடம் படிக்கும் அவலம் தொடர்கிறது.


கேரள எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் 6ம் வகுப்புக்கு மேல் படிக்க வேண்டுமானால், 11 கி.மீ., துாரமுள்ள கிணத்துக்கடவு, அல்லது மதுக்கரைக்கு சென்றாக வேண்டும். மாணவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, முத்துக்கவுண்டனுாரில் 1970ல் உயர்நிலைப்பள்ளி கட்டப்பட்டு, அன்றைய அமைச்சர் சாதிக்பாட்சாவால் திறக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக திறமையான ஆசிரியர்களின் சீரிய கற்பிக்கும் முறையால், பள்ளியின் தேர்ச்சி விகிதம் படிப்படியாக உயர்ந்தது. நடப்பு ஆண்டு 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலைப் பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டது. முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கிய நிலையில், பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. முதலாம் ஆண்டும் முடிந்து, தற்போது இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) வகுப்புகள் துவங்கியுள்ளது. ஆனாலும், கூடுதல் பள்ளிக்கட்டடம் வரவில்லை.

பள்ளி துவங்கிய காலத்தில் கட்டப்பட்ட கட்டடம் தற்போது வலுவிழந்து விட்டதாக கூறி, கைவிடப்பட்டுள்ளது. இக்கட்டடம் எவ்வித பராமரிப்பும் இன்றி, கதவு, ஜன்னல்கள் இல்லாமல் பாழடைந்த பங்களாவாக காட்சி அளிக்கிறது. இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களில் தான் வகுப்புகள் நடக்கின்றன. தற்போதைய நிலையில் ஒரே கட்டடத்தில் தட்டிகள் வைத்து வகுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன. மாணவர்களும் நெருக்கமான சூழலில் கற்று வருகின்றனர்.

தற்சமயம், பிளஸ் 2 வகுப்புகள் இங்குள்ள மரத்தடியில் தான் நடக்கிறது. பருவமழை துவங்கியுள்ள நேரத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளியைச் சுற்றிலும் புதர்கள் காணப்படுகின்றன. இப்புதர்களில் சமூக விரோத செயல்கள் நடந்தாலும், அதை கேட்க காவலாளி இல்லை; காவல் காக்க சுற்றுச்சுவரும் இல்லை.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு கூறுகையில், "சுற்றுச்சுவர் இல்லாததால் விடுமுறை நாட்களில் சமூக விரோத செயல்கள் அதிகம் நடக்கின்றன. கார்களில் வருபவர்கள் இங்கு மது குடிப்பதும், கும்மாளம் அடிப்பதும் அடிக்கடி நடக்கிறது. காவலாளி நியமிக்கப்பட்டால் பிரச்னை எதுவும் நடக்காது. முதலில் பழைய கட்டடத்தை அப்புறப்படுத்தி, புதிய கட்டடம் கட்ட வேண்டும். புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.