Pages

Thursday, June 26, 2014

பள்ளிகளில் 13 வகை புதிய விளையாட்டுகள்: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 13 வகை புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உடற்கல்வி, இயக்குனர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு படி, தடகளம், ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் உள்பட 40 வகை விளையாட்டுகள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.
இவற்றில் சில விளையாட்டுகளில் மட்டும் மாணவர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடிகிறது. 20 விளையாட்டுகள் மட்டுமே, கல்லூரியில் சேரும்போது, மாணவர்களுக்கு தெரியவருகிறது. இதனால், அனைத்து விளையாட்டுகளும், பள்ளி மாணவர்களுக்கு கற்று தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதன்படி ஜிம்னாஸ்டிக்ஸ், டேக்வாண்டோ, குத்துச்சண்டை, ஜூடோ, பென்சிங், சைக்கிளிங், பீச் வாலிபால், கேரம், செஸ், டென்னி காய்ட் உள்பட 13 வகை புதிய விளையாட்டுகளை நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது. இந்த விளையாட்டுகள் குறித்து உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்களுக்கு சென்னை, கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட இடங்களில் கடந்த வாரம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு விளையாட்டிற்கு மாவட்டத்திற்கு 5 உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள் வீதம் 65 பேருக்கு 3 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் ஒரு மணி நேர தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 70 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் கிரேடு, 60 முதல் 70 மதிப்பெண் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2 ம் கிரேடு, 50 மதிப்பெண் எடுத்தால் 3 ம் கிரேடு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சான்றிதழ் பெறும் ஆசிரியர்கள் மட்டுமே புதிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கவும், போட்டிகளின் போது நடுவர்களாக பணியாற்றவும் பள்ளி கல்வித்துறை மூலம் அனுமதிக்கப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.