வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனம் குறித்து, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற பேராசிரியர், இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், "யு.ஜி.சி., விதிமுறைகளை பின்பற்றாமல், ஆசிரியர்களை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நியமித்துள்ளது. நிபுணர்களை நியமித்து ஆசிரியர்களின் தகுதி பற்றி, ஆய்வு செய்யுமாறு யு.ஜி.சி.,க்கு உத்தரவிட வேண்டும். யு.ஜி.சி.,யின் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை, உறுதி செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
தற்காலிக தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதி ரவிச்சந்திரபாபு அடங்கிய, முதல் பெஞ்ச் மனுவை விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சத்தியசந்திரன், யு.ஜி.சி., சார்பில், வழக்கறிஞர் பி.ஆர்.கோபிநாதன் ஆஜராகினர். விதிமுறைகளை மீறி, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனரா என்பதை, ஆராய வேண்டிய பொறுப்பு, யு.ஜி.சி.,க்கு உள்ளது. எனவே, யு.ஜி.சி., ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது.
ஆய்வின் போது, சரிபார்ப்பு நடவடிக்கைக்காக, தேவையான ஆவணங்களை, திருவள்ளுவர் பல்கலைகழகம் வழங்க வேண்டும். இவ்வாறு, முதல் பெஞ்ச் இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment