Pages

Friday, March 21, 2014

முன்னணி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், முதல் வகுப்பிற்கு, 1.25 லட்சம் ரூபாய், கட்டணம் வசூல்

தமிழகம் முழுவதும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) கீழ் இயங்கி வரும் பள்ளிகளில், 2014 - 15ம் ஆண்டு மாணவர் சேர்க்கை, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னணி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், முதல் வகுப்பிற்கு, 1.25 லட்சம் ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தடுக்க வேண்டிய, சி.பி.எஸ்.இ., அதிகாரிகளும், கட்டண நிர்ணய குழு அலுவலர்களும், வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில், 450 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, தீவிரமாக நடந்து வருகிறது. 'ஏப்ரல், மே மாதங்களில் தான், மாணவர் சேர்க்கை பணிகளை செய்ய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளபோதும், அதைப்பற்றி கவலைப்படாமல், மாணவர் சேர்க்கை நடக்கிறது. சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள, பெரிய, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு கட்டணமாக, 1.25 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இதற்கு அடுத்த நிலையில் உள்ள பள்ளிகளில், 80 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பல பள்ளிகளில், உரிய ரசீது கொடுக்காமல், துண்டு சீட்டில், கட்டண விவரங்களை எழுதிகொடுத்து, பணத்தை கட்ட சொல்கின்றனர். ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பிற்கு கூட, புத்தக கட்டணமாக, 16 ஆயிரம் ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. 'சிறிய வகுப்பிற்கு, இவ்வளவு கட்டணமா?' என, பெற்றோர், வாய் பிளக்கின்றனர். ஆனாலும், வேறு வழியில்லாமல், புலம்பியபடி, கட்டணங்களை செலுத்துகின்றனர்.
நியாயமான கட்டணங்கள்:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளின், இந்த வசூல் வேட்டையைத் தடுக்க, சென்னையில் உள்ள, சி.பி.எஸ்.இ., தென் மண்டல அதிகாரிகளோ அல்லது, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழுவோ, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சி.பி.எஸ்.இ., பள்ளிகளின், அதிக வசூல் வேட்டையை தடுத்து நிறுத்தவும், நியாயமான கட்டணங்களை நிர்ணயிக்கவும், கட்டண நிர்ணய குழுவிற்கு, அதிகாரம் உள்ளது.
இக்குழு, ஏற்கனவே பல, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, கல்வி கட்டணங்களை நிர்ணயித்து உள்ளது. அதிக கட்டணம் வசூல் தொடர்பாக, பெற்றோரிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில், கடந்த காலங்களில் விசாரணை நடத்தி, 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமான கட்டணங்களை, பெற்றோருக்கு, திருப்பித் தர நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், குறிப்பிட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள், கண்டும், காணாமல் உள்ளனர்.
கட்டண நிர்ணய குழு அலுவலக வட்டாரம் கூறுகையில், 'முன்கூட்டியே, மாணவர் சேர்க்கை நடப்பதை, எங்களால் தடுத்து நிறுத்த முடியாது. அதை, அரசு தான் செய்ய வேண்டும். ஆனால், அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து, பெற்றோர், ஆதாரங்களுடன், எங்களிடம் புகார் தரலாம். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்' என, தெரிவித்தது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம், கட்டண நிர்ணய குழுவிற்கு இல்லை என, தெரிவித்து, சிலர், சுப்ரீம் கோர்ட் வரை வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் இருந்தாலும், கட்டண நிர்ணய காலம் முடிந்த, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, 2016ம் கல்வி ஆண்டு வரை, புதிய கட்டணம் நிர்ணயித்து, குழு அறிவித்து உள்ளது.
புகார் அளிக்கலாம்:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, பெற்றோர், புகார் அளிக்க வேண்டிய அலுவலகங்கள்: 1. நீதிபதி சிங்காரவேலு, தலைவர், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு, டி.பி.ஐ., வளாகம், கல்லூரி சாலை, சென்னை - 6.
2. சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல அலுவலகம், எண்: 3, பழைய எண்: 1630, 16வது மெயின் ரோடு, அண்ணா நகர் மேற்கு, சென்னை - 40, தொலைபேசி: 044-2616 2213,14, பேக்ஸ்: 044-2616 2212

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.