Pages

Monday, February 3, 2014

ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பணி பதிவேடு: இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் தொடங்க திட்டம்

ஆசிரியர்களின் ஜாதகமாக விளங்குவது அவர்களின் பணி பதிவேடு எனப்படும் சர்வீஸ் ரெஜிஸ்டர் ஆகும். ஆசிரியர்களின் விபரங்கள் மட்டுமின்றி அவர்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல் ஒவ்வொரு கட்டங்களிலும் அவர்களின் பதவி உயர்வு, சம்பள விபரங்கள் அனைத்தும் இதில் இடம் பெற்றிருக்கும். மேலும் பணிக்காலத்தில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விபரங்களும் இதில் இடம்பெறும்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பணிபதிவேடு வெள்ளம், தீ போன்ற சூழலால் பள்ளிகளில் இருந்து பாதிக்கப்பட்டால் அந்த ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அவர்கள் பணிபதிவேட்டை திரும்ப பெறுவதில் சிக்கல்கள் உண்டு.

இந்தநிலையில் பணி பதிவேட்டை ஆன்லைன் மயமாக்கி இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் என்ற பெயரில் மாற்றம் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சம்பள கமிஷனின் போது ஊதிய நிர்ணய விபரங்கள், பதவி உயர்வு, இடமாறுதல்கள், ஓய்வு கால பலன்கள் போன்றவை எளிதாக மேற்கொள்ள முடியும்.பள்ளிகளில் தற்போது கல்வி மேலாண்மை முறையில் மாணவ, மாணவியர் விபரங்கள் புகைப்படத்துடன் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆசிரியர்களின் விபரங்கள் ‘டீச்சர்ஸ் புரொபைல்‘ என்ற பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக தொடக்க கல்வித்துறையில் ஒன்றிய வாரியாக இந்த பதிவுகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் இ-சர்வீஸ் ரெஜிஸ்டருக்கான விபரங்களும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இதற்கான கருத்தாளர்களுக்கான கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாவட்டம் தோறும் பள்ளிகள் தொடர்பான தகவல் சேகரிப்பு தொகுப்பில் இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் என்ற பகுதியில் ஆசிரியர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. அதில் ஆசிரியர்கள் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள், இனம், மொழி, பதவி உயர்வு விபரங்கள், பெறுகின்ற சம்பளம், வீட்டு முகவரி, ரத்த பிரிவு, உடல் அடையாளங்கள், போட்டோ, இ-மெயில் முகவரி, செல்போன் எண், இருசக்கர, 4 சக்கர வாகனம் இருப்பின் அதன் பதிவு எண், பான்கார்டு போன்ற விபரங்கள் பதியப்படும். மேலும் இதன் தொடர்ச்சியாக பணி பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்ற விடுப்பு, விடுப்பு ஒப்படைப்பு, டிபிஎப், சிபிஎஸ், எஸ்பிஎப், எச்எப் போன்றவற்றுக்கு வாரிசு நியமனம், ஆதார் அட்டை எண் போன்றவையும் பதிவு செய்யப்படும்‘ என்றார்.இதன்மூலம் இனி ஆசிரியர்களின் பணிபதிவேடு எளிதில் கையாளத்தக்க வகையில் வெள்ளம், தீ போன்றவற்றால் எந்த சூழ்நிலையிலும் சேதப்படுத்தப்படாத இ-சர்வீஸ் ரெஜிஸ்டராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.