Pages

Sunday, February 2, 2014

தமிழகத்தில் அரசு பணி வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போர் 90 லட்சம் பேர்

தமிழகத்தில் அரசு பணி வேண்டி, 90 லட்சத்து, 13 ஆயிரத்து, 163 பேர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். சில ஆண்டுகளாக, பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படுவதால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர் பதிவு அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, அனைத்து அரசு பணிகளும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதில், அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வந்தனர்.

குளறுபடி:

தேர்வு முடிவு வெளிவந்தவுடன், வேலைவாய்ப்பு பதிவு செய்வதற்கு, அளவுக்கதிகமாக மாணவ, மாணவியர் குவிந்து விடுவதால், பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம் மற்றும் குளறுபடிகளால், அவதிக்கு உள்ளாகினர். இதனால், மாணவ, மாணவியர் சிரமங்களை குறைக்கும் வகையில், அந்தந்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும் ஆன் - லைன் மூலம், பதிவு செய்தல், பதிவை புதுப்பித்தல் என, அனைத்து நடவடிக்கைகளும் எளிமையாக்கப்பட்ட நிலையில், பதிவு செய்ய, கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை மாறியது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு, அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வரை, 90 லட்சத்து 13 ஆயிரத்து 163 பேர் பதிவு செய்து, அரசு பணிக்காக காத்து இருக்கின்றனர். இதில், 45 லட்சத்து 12 ஆயிரத்து 169 பேர் பெண்கள். இதில், பத்தாம் வகுப்புக்கு கீழ், 5 லட்சத்து 77 ஆயிரத்து 694 பேரும், பத்தாம் வகுப்பு முடித்து, 31 லட்சத்து 25 ஆயிரத்து 930 பேரும், பிளஸ் 2 கல்வித்தகுதியில், 22 லட்சத்து 66 ஆயிரத்து 195 பேரும், பதிவு செய்துள்ளனர். இதற்கு அடுத்து இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு, 6 லட்சத்து 67 ஆயிரத்து 962 பேர் பதிவு செய்துள்ளனர். பட்டப்படிப்பு படிப்பவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இளங்கலை பட்டப்படிப்பில், 11 லட்சம் பேரும், முதுகலை பட்டப்படிப்பில், 2.5 லட்சம் பேரும் பதிவு செய்துள்ளனர்.

அலட்சியம்:

வேலைவாய்ப்பு அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பட்டப்படிப்பு படித்தவர்கள் பதிவு செய்வதில், அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. அதிலும், பட்டப்படிப்பு முடிக்கும் ஆண்களிடம், இந்த அலட்சியம் அதிக அளவில் உள்ளது. தமிழகத்தில், அதிக அளவில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படித்தாலும், அந்த அளவுக்கு பதிவு அதிகரிப்பதில்லை. மேலும், தற்போது அனைத்து பணியிடங்களும், டி.என்.பி.எஸ்.சி., மற்றும் டி.ஆர்.பி., என, தேர்வு முறையில், நியமிக்கப்படுவதால், வேலைவாய்ப்பு பதிவு குறித்து பெரிதாக கண்டுகொள்வதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.