Pages

Tuesday, February 4, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் சலுகை போதாது: ராமதாஸ்

இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் 5 சதவீதம் குறைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது யானை பசிக்கு சோளப்பொறி போடுவதை போன்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இது முழுமையான பயனை அளிக்காது.

தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசின் கொள்கையை அறிவிக்காமலேயே காலம் தாழ்த்தி வந்தார். ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதத்திற்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வின் மூலமாகவும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வின் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவர் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 60% மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பது உட்பட கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டதால், தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு (தேர்ச்சி மதிப்பெண்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சலுகை வழங்குதல்) வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன். இதே கருத்தை தமிழ்நாட்டில் உள்ள மேலும் பல கட்சிகளும் வலியுறுத்தின.

ஆனால், ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வழங்குவதை மட்டுமே சுட்டிக்காட்டி, தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து நிராகரித்து வந்தார்.

தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் மத்திய சமூகநீதி அமைச்சகத்திடமிருந்து நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் 60 விழுக்காட்டிலிருந்து 55 விழுக்காடாக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இது போதுமானதல்ல. கடந்த 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் சராசரியாக 5 விழுக்காட்டினர் கூட தேர்ச்சி பெற முடியாததற்கு அதிக அளவிலான தேர்ச்சி மதிப்பெண் தான் காரணம் ஆகும். இதைக் கணிசமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், வெறும் 5% மட்டும் குறைத்திருப்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போடுவதைப் போன்றதாகும்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்தால், தரமான ஆசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள் என்று முன்வைக்கப்படும் வாதங்கள் தவறானவை. அண்டை மாநிலமான ஆந்திராவில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களாக பொதுப்பிரிவினருக்கு 60%, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50%, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 40% நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. இதனால், ஆந்திராவில் உள்ள பள்ளி ஆசிரியர்களின் தரம் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை.

மாறாக, தரமான ஆசிரியர்களை மட்டுமே நியமிப்பதாக கூறிக்கொள்ளும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களில் வெறும் 31 பேர் மட்டுமே ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆந்திர மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 3538 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதிலிருந்தே ஆசிரியர்களின் தரம் தொடர்பான தமிழக அரசின் வாதம் தவறு என்பது புலனாகும்.

சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் அதை முழுமையாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் பெயரளவுக்கு சலுகை வழங்குதல் போன்ற அரைக் கிணறு தாண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

எனவே, ஆந்திர மாநிலத்தில் கடைபிடிக்கப்படும் தேர்ச்சி மதிப்பெண் முறையை தமிழக சூழலுக்கு மாற்றி பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 45 விழுக்காடும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 40 விழுக்காடும், மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடும் தேர்ச்சி மதிப்பெண்களாக நிர்ணயிக்க வேண்டும்.

இதை கடந்த 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தகுதித் தேர்வுகளிலும் நடைமுறைப்படுத்தி, அதற்கேற்றவாறு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை புதிதாக வெளியிட வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.