Pages

Friday, January 17, 2014

எப்போதும் நிதானத்தை இழக்கக்கூடாது - இதுவே தாரக மந்திரம்!

பல்வேறான நேர்முகத் தேர்வுகளில், இறுதி கேள்வியாக, "நீங்கள் எங்களிடம் எதுவும் கேட்க விரும்புகிறீர்களா?" என்பதாகவே இருக்கும். அதுபோன்ற கேள்வி கேட்கப்பட்டால், நேர்முகத் தேர்வு கமிட்டியினர், ஜனநாயகத் தன்மையுடனும், நன்கு பக்குவமடைந்தும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.


ஆனால் அதுபோன்ற கேள்விக்கு, "என்னிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை என்றும், கமிட்டி உறுப்பினர்கள்தான், நேர்முகத் தேர்வில் கேள்விகளை கேட்க வேண்டும்" என்ற பதிலை கட்டாயம் சொல்லக்கூடாது.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக, முடிந்தளவு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைப் பற்றிய விபரங்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அவற்றில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால், அதுபோன்ற நேரங்களில் தரப்படும் வாய்ப்பை பயன்படுத்தி கேள்விகளை கேட்டு அவர்களை ஆச்சர்யப்பட வைக்க முடியும். இதனால் உங்களின் முக்கிய சந்தேகங்களும் தீர்க்கப்படும்.

நிறுவனத்தின் நடப்பு புராஜெக்ட்டுகள், எதிர்கால திட்டங்கள், நீங்கள் பணியமர்த்தப்படக்கூடிய இடம் மற்றும் பணியில் சேர வேண்டிய தேதி(தேர்வு செய்யப்பட்டால்) போன்றவை கேட்கப்படக்கூடிய சில முக்கிய கேள்விகள்.

மன அழுத்த சூழல்கள்

நேர்முகத் தேர்வின்போது, பல தேர்வு கமிட்டி உறுப்பினர்கள், கலந்துகொள்ளும் நபரிடம் மனஅழுத்தத்தை உண்டாக்க முயல்வார்கள். இதன்மூலம் அவர் எவ்வாறு react செய்கிறார் என்பதை அறிந்துகொள்வது அவர்களின் நோக்கம்.

ஏனெனில், ஒரு நிறுவனப் பணி என்பது, ரோஜா மெத்தையில் படுத்திருப்பது போன்றதோ அல்லது தென்றலில் இளைப்பாறுவது போன்றதோ அல்ல. அதிக சவால்களும், நெருக்கடிகளும், இக்கட்டான சூழல்களும் நிறைந்தது. இதற்கேற்ப ஒரு பணியாளர் தயாராக இருக்க வேண்டியது முக்கியம்.

எனவே, உங்களிடமிருந்து சரியான reaction வருகிறதா என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். வருங்காலத்தில், பணியமர்த்தப்படக்கூடிய ஒருவரின் மனநிலையை சரியாக அறிந்துகொள்ளும் வகையில், Electro encephalograph போன்ற மருத்துவ உபகரணங்களை நிறுவனங்கள் பயன்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதுபோன்ற சோதனையில், நீங்கள் வாயைத் திறந்து எதையும் பேசவில்லை என்றாலும்கூட, உங்களின் மாறும் முகபாவனைகள், உங்களின் உடல் மொழிகள் போன்றவற்றை ஆராய்ந்து அவர்கள் மனநிலையை கணித்து விடுவார்கள்.

ஒரே நேரத்தில்...

உங்களின் மனவலிமையை அறியும் சோதனையில், நேர்முகத் தேர்வு கமிட்டியினர், ஒருவர் பின் ஒருவராக உங்களிடம் கேள்விகளை கேட்காமல், ஒரேநேரத்தில், பலவிதமான கேள்விகளை அனைவரும் கேட்பார்கள்.

இதுபோன்ற சூழலில், நீங்கள் இப்படி சொல்லக்கூடாது, "இப்படி கேட்டால் நான் எதற்கு பதில் சொல்வது? என்னால் பதில் சொல்ல இயலாது. தயவுசெய்து ஒவ்வொன்றாக கேளுங்கள்" என்பதுதான் அது.

மேலும், முக்கிய அம்சம் என்னவென்றால், உங்களின் முக பாவனையை கடுமையாகவும், குழப்பமாகவும் மாற்றி வைத்துக்கொள்ளக்கூடாது. உடலில் கலவரம் இருக்கக்கூடாது. நீங்கள் ஏதோ இக்கட்டில் மாட்டிக் கொண்டதுபோல் காட்டிக்கொள்ளக்கூடாது.

ஏனெனில், நேர்முகத் தேர்வு என்பது போர்க்களமல்ல. உங்களை சோதிக்கும் ஒரு களம்தான் என்பது எப்போதுமே மனதில் இருத்தப்பட வேண்டும்.

மாறாக, நீங்கள் இவ்வாறு கூறவேண்டும், "நீங்கள் அனைவரும் கேட்ட கேள்விகளில், இந்த கேள்விக்கு முதலில் பதிலை சொல்கிறேன். பிறகு இந்த கேள்விக்கும், அதனையடுத்து, மற்ற கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்" என்று எந்த பதட்டமும் இல்லாமல், மிருதுவாக கூற வேண்டும்.

இதைத்தான் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பார்கள். நேர்முகத் தேர்வு எவ்வளவு நேரம் நீடித்தாலும், நீங்கள் எந்தவித எரிச்சலையோ, சலிப்பையோ அல்லது சோர்வையோ, எந்த வகையிலும் கட்டாயம் வெளிப்படுத்தவேக் கூடாது. அப்படி வெளிக்காட்டினால், அதுவே தகுதியிழப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்துவிடும்.

ஒரு முக்கிய தாரக மந்திரத்தை நினைவில் கொள்வது ஒவ்வொருவருக்கும் அவசியம். அது நேர்முகத் தேர்வுக்கு மட்டுமல்ல. வாழ்க்கை முழுவதற்கும்தான்.

"எப்போதும் உனது நிதானத்தை இழந்துவிடாதே" என்பதுதான்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.