சேலையூரை தலைமையிடமாக கொண்டு தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதன் கிளை பள்ளி மாடம்பாக்கம், செம்பாக்கம், திருமலை நகரில் செயல்படுகிறது.
இந்த பள்ளிகளில் கடைசியாக நடந்த வேலை நாட்களில் 10, 12ம் வகுப்பு மாணவர்களும், அனைத்து ஆசிரியர்களும் விடுமுறை நாளான நேற்று கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும். மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் அறிவித்தது.
இதையடுத்து நேற்று காலை ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளிக்கு வந்தனர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். அப்போது, அனைத்து மாணவர்களையும் பள்ளியில் இருந்து வெளியேறும்படி நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து அனைவரும் வெளியேறினர்.அரசு விதிப்படி அரசின் விடுமுறை நாட்களில் பள்ளி இயங்குவதற்கும், சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி பள்ளி நிர்வாகம் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு புகார் வந்தது. அதன்படி, ஆய்வாளர்கள் பள்ளியில் ஆய்வு செய்ய வருவதை அறிந்த பள்ளி நிர்வாகம் அவசர அவசரமாக மாணவர்களையும், ஆசிரியர்களையும் அனுப்பினர் என தெரிந்தது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் சுந்தர்ராஜனை கேட்டபோது, அரசு விதிப்படி விடுமுறை நாட்களில் பள்ளியோ, சிறப்பு வகுப்போ நடத்தக்கூடாது. ஆனால் இந்த பள்ளி செயல்படுவதாக எங்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும்படி உத்தரவிட்டோம். மேலும் ஆண்டு தொடக்கத்தில் அரசின் விதிமுறையை சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளோம். அதனையும் பள்ளி நிர்வாகம் மீறியுள்ளது.இந்த விசாரணை அறிக்கையை கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளோம். அவரது உத்தரவின்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment