Pages

Tuesday, January 28, 2014

"ஊறுகாய், கருவாடு அதிகமாக சாப்பிட்டால் இரைப்பை புற்றுநோய் வரும்'

ஊறுகாய், கருவாடு உள்ளிட்ட உப்பு அதிகம் கலந்த உணவை அதிகமாக சாப்பிட்டுவந்தால் இரைப்பை புற்றுநோய் வரும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இரைப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தென்கொரியாவைச் சேர்ந்த இரைப்பை புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர் எச்.கே.யங் மற்றும் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி இரைப்பை குடல் அறுவைசிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் சந்திரமோகன் கூறியது:
கொரியா, ஜப்பான், வெனிசுலா போன்ற நாடுகளில் இரைப்பை புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது. இந்த நாடுகளில் உள்ளவர்கள் உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்து கொள்வதுதான் காரணம். இந்த நாடுகள் கடந்த  30 ஆண்டுகளாக இரைப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றன. இதனால் இந்த நாடுகளில் 60 சதவீத மக்கள் புற்றுநோய் தாக்கத்தின் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில் 90 சதவீதத்தினர் புற்று நோயை குணப்படுத்த முடியாத இறுதி நிலையிலேயே  சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த நிலையை மாற்ற  இரைப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்த வேண்டும்.
ஊறுகாய்,கருவாடு உள்ளிட்ட உப்பு அதிகம் கலந்த உணவை அதிக அளவில் எடுத்துக் கொள்வதாலும், ஒரு தடவை பயன்படுத்திய எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகள், நீண்ட நாள்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுவதாலும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களின் காரணமாகவும் இரைப்பை புற்றுநோய் உருவாக வாய்ப்பு உள்ளது.
உலகில் பெண்களை விட ஆண்களே இரைப்பை புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இதற்கு காரணம் ஆண்களின் உணவுப் பழக்கமும், புகை, மது போன்ற தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதும் ஆகும். பசியின்மை, மேல் வயிற்றில் வலி, கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, வயிற்றில் கட்டி, கருப்பு நிறத்தில் மலம் வெளியேற்றம், ரத்த வாந்தி எடுத்தல் போன்றவை இரைப்பை புற்றுநோயின் அறிகுறிகளாகும்.
ஆரம்ப காலத்திலேயே எண்டோஸ்கோபி, அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன் ஆகிய  பரிசோதனைகளை செய்து இரைப்பை புற்றுநோயை கண்டறிந்து,  அறுவைச் சிகிச்சை செய்து கொண்டால் நோய் குணமாக வாய்ப்புள்ளது. இல்லையெனில் புற்றுநோய் குடல் முழுவதும் பரவி உயிருக்கு ஆபத்தாகி விடும் என்றார் யங்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.