Pages

Friday, January 31, 2014

பொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் தேர்வுத்துறை அதிரடி

முறைகேடுகளை தடுக்கும் வகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகளுக்கு, ஆசிரியர்களை இனி தேர்வுத்துறை இயக்குனரகமே, நியமிக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரையும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9-ம் தேதி வரை நடக்கிறது.
இதற்கான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரே நியமித்து வந்தார். 
குறிப்பிட்ட சில பள்ளிகளில், குறிப்பிட்ட தேர்வு பணியில் சிலர் ஈடுபடுவதால், முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக புகார் சென்றுள்ளது. மேலும் சீனியர் ஆசிரியர்கள் தங்களுக்கு பணி ஒதுக்காதவாறு, கல்வி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, புதிய ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்பி வந்தனர்.
இந்நிலையில், தேர்வுக்கு பணியாளர் நியமிப்பதை, தேர்வுத்துறை இயக்குனரகமே நேரடியாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதன்படி, தேர்வு மையங்கள் எண்ணிக்கை, ஒவ்வொரு மையத்திலும் தேர்வெழுதும் மாணவர்கள் எண்ணிக்கை விபரம், ஆசிரியர்கள் விபரங்களை ஏற்கனவே தேர்வுத்துறையிடம் பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில், ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதே போல் விடைத்தாள் திருத்தும் பணியிலும் மாற்றம் செய்ய உள்ளது. ஆசிரியர் ஒருவர் கூறும்போது: மாவட்ட கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறை கண்காணிப்பாளர் விபரம், தேர்வுத்துறை இயக்குனரகத்திலிருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் தேர்வுத்துறை இயக்குனரகம் ஒதுக்கீடு செய்த நாட்களில் கண்டிப்பாக,தேர்வுப்பணியாற்ற வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.