தமிழக அரசின் சார்பில், நடப்பு நிதியாண்டில் செயல்படுத்த வேண்டிய, நிர்ணயிக்கப்பட்ட திட்டங்களை, வரும் பிப்ரவரி கடைசிக்குள் முடிக்க வேண்டும்' என, உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருவதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
மத்திய, மாநில அரசு சார்பில், வளர்ச்சிப் பணிகளுக்காக, மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குடிநீர் வசதி:அதில், எம்.பி., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில், குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, நிழற்குடை வசதி, கழிப்பறை வசதி, ரேஷன் கடை, உற்பத்தி மையங்கள், சமுதாயக் கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி, பள்ளி கட்டடம், சுயஉதவிக்குழு கட்டடம், சாலைத் தடுப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன.அதேபோல், பள்ளிக் கல்வி, சமூக நலம், வருவாய், மருத்துவம், பொது சுகாதாரம், ஊரக வளர்ச்சி, குடிநீர் வடிகால், வேளாண்மை, மகளிர் திட்டம், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், நகர் ஊர் அமைப்பு, தாட்கோ, மாற்றுத்திறனாளி, பொதுப்பணி, நெடுஞ்சாலை, சுற்றுலா, வணிகம், கால்நடை உள்ளிட்ட துறை சார்ந்த பணிகளும் செய்யப்படுகின்றன.
நிதி ஒதுக்கீடு:ஒவ்வொரு நிதியாண்டும், அதாவது ஏப்ரல், 1ம் தேதி முதல், மார்ச், 31ம் தேதி வரை, திட்டங்கள் தயாரித்தல், நிர்வாக அனுமதி பெறுதல், நிதி ஒதுக்கீடு செய்தல்,இலக்கு நிர்ணயம் செய்தல், திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட முறைகளில், அந்தந்த நிதியாண்டுக்குள் பணிகள் முடிக்கப்படும்.இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், லோக்சபா தேர்தலுக்கான நிர்வாக ரீதியான பணி துவங்கப்பட்டுள்ளதால், மார்ச், 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டியப் பணிகளை, பிப்ரவரி, 28ம் தேதிக்குள் முடித்துக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கான அட்டவணை, பிப்ரவரி கடைசியில் வெளியாகும். தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்னதாக, மார்ச், 31ம் தேதி முடிக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும்.நிதியாண்டுக்கு முடிவதற்கு ஒரு மாதம் முன்னதாக, இலக்கு திட்டங்களை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதால், அவசரகதியில் பயனாளிகள் பட்டியல் தயார் செய்து, செயல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு, அரசுத்துறை அதிகாரிகள்நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குளறுபடி:வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்கான நடத்தை விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன், மக்கள் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்படும். ஆனால், தற்போது, நடப்பு நிதியாண்டிற்குள் முடிக்க வேண்டிய பணிகளை, ஒரு மாதத்திற்கு முன்னதாக முடித்து விட வேண்டும் என, நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அதனால், உரிய பயனாளிகளை தேர்வு செய்வதில், குளறுபடி ஏற்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.