அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், போலி சான்றிதழ் கொடுத்து, தொலைதூரக் கல்வி படிப்பு மையத்தில் தனி அலுவலராக பணிபுரிந்தவர், பணிநீக்கம் செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஏப்ரல் 4ம் தேதி, நிர்வாக சிறப்பு அதிகாரியாக முதன்மைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு பல்கலைக்கழகம், அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து, குறிப்பிட்ட காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்களின் கல்விச் சான்றிதழ்கள், ஆய்வுக்கு அனுப்பி சரிபார்க்கப்பட்டது.
அதில், திருவண்ணாமலை தொலைதூரக் கல்வி படிப்பு மைய தனி அலுவலராக பணிபுரிந்து வந்த கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த சரவணன் மகன் செந்தில்குமார் 26, என்பவர், போலி சான்றிதழ் கொடுத்து 2011, ஜூலை 14ம் தேதி பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், 2004-08ம் கல்வி ஆண்டில், "எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் இன்ஜினியரிங்" படித்ததாக, சான்றிதழ் கொடுத்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சான்றிதழை அனுப்பி சரிபார்த்ததில், அவர் கொடுத்த சான்றிதழ் போலி என தெரியவந்தது. இதையடுத்து, செந்தில்குமாரின் பணி நியமன உத்தரவை ரத்து செய்யும்படி நிர்வாக சிறப்பு அதிகாரி, ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார். பல்கலைக்கழகத்தில், 1,700க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட நபர் முதன் முதலாக பணிநீக்கம் செய்யப்பட்டது, ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment