மாணவர்கள் குண்டாவதை தவிர்க்க, அவர்களை நிற்க வைத்து பாடத்தை கவனிக்கும் வகையிலான நடைமுறை ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தேவைக்கு அதிகமான அளவில், ஊட்டச் சத்து உண்டும், உடல் உழைப்பு இன்றியும், மாணவர்கள் உடல் பருமன் அடையும் நிலையில் அதைத் தவிர்க்க திட்டம் தீட்டாமல், நின்ற நிலையில் பாடம் படிக்க வேண்டும் என்ற உத்தரவு, நகைப்புக்கு உரியதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும், உடல் எடை அதிகரிப்பு மற்றும் இளம் வயதில் ஏற்படும் நீரிழிவு நோய்க்கான காரணங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் அதிக நேரம் அமர்ந்த வண்ணம் பாடங்களை கற்பதால் அவர்களுக்கு உடல் எடை அதிகரித்து நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்று மாணவர்கள் நின்ற வண்ணம் பாடம் கற்கும் வகையில் வகுப்பறையை அமைத்துள்ளது. இதுகுறித்து, பள்ளி நிர்வாக அதிகாரி கூறியதாவது:
மாணவர்களுக்கு உயரத்தை அதிகரித்தும், குறைத்தும் பயன்படுத்தும் வகையிலான மேஜைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மேஜைகளின் உதவியுடன், மாணவர்கள் குறிப்பிட்ட சில மணி நேரம் கண்டிப்பாக நின்றபடியே பாடங்களை கவனிக்க வேண்டும். விருப்பப்படும் மாணவர்கள், முழு நேரமும் நின்றபடியே பாடங்களை கவனிக்கலாம்.
மாணவர்கள் நீண்ட நேரம் அமர்ந்த வண்ணம் பாடங்களை கவனிப்பதால் அவர்களின் தசைகளின் செயல்பாடு குறைந்து விடுகிறது. நின்றபடி பாடங்களை கவனிப்பதாலும் பிற வேலைகளில் ஈடுபடுவதாலும், தசைகளின் வலிமை அதிகரிப்பதால் கொழுப்பு குறைக்கப்பட்டு, உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.
இந்த முறையை பின்பற்றும் மாணவர்களின் செயல் திறன், ஞாபக சக்தி, உடல் எடை மாற்றம், உடலில் ஏற்படும் வேறு சில மாற்றங்கள் போன்றவை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்யப்படும். மாணவர்களின் உடலில் ஏற்படும் மாற்றத்தைப் பொருத்து இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும். இவ்வாறு, பள்ளி நிர்வாக அதிகாரி கூறினார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில், "கம்ப்யூட்டர் மூலம் பாடம் நடத்தும் நடைமுறையும், நுண்ணூட்டச் சத்து அதிகரிக்கப்பட்ட உணவு வகைகளை மாணவர்கள் உண்பதும், உடற்பயிற்சிக்கென போதுமான நேரம் ஒதுக்காததுமே மாணவர்கள் உடல் பெருக்கக் காரணங்களாக அமைந்துள்ளன.
பள்ளிகளில் நின்ற நிலையில் மாணவர்கள் பாடம் படிக்க நேர்ந்தால் பள்ளிப் படிப்பையே மாணவர்கள் விட்டு விடும் நிலை ஏற்படலாம். பள்ளியின் இச்செயல் நகைப்புக்கு உரியதாக உள்ளது" என கருத்து தெரிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.