Pages

Thursday, December 26, 2013

7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்திய அரசு ஜரூர்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, பத்தாண்டுக்கு ஒரு முறை சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்காக, சம்பள கமிஷன் அமைக்கப்படும்.
இந்த கமிஷன், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, இரண்டு ஆண்டுகளில், அறிக்கை அளிக்கும். இதன் பரிந்துரைகள், உடனடியாக அமலுக்கு வரும். 

இதன்படி, கடந்த ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை, 2006, ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை, 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையில், ஏழாவது சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அறிவிப்பை, எதிர்பார்த்து, மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். 

சில மாதங்களுக்கு முன், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், வெளியிட்ட அறிவிப்பில், ஏழாவது சம்பள கமிஷன் அமைக்க, பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்து விட்டார் என, குறிப்பிட்டு இருந்தார்.

லோக்சபா தேர்தல், அடுத்தாண்டு, மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வருவதற்கு முன், சம்பள கமிஷன் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு மத்திய அரசு முயன்று வருகிறது. 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 35 லட்சம் ஓய்வூதியதாரர்கள், இதனால், பயன் அடைவர். சமீபத்தில், நடந்து முடிந்த பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், நிதி மானிய கோரிக்கைக்கு ஒப்புதல் வாங்கப்பட்டது. இதில், இரண்டாவது, துணை மானிய கோரிக்கையாக, 3.5 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் பெறப்பட்டது. இது, ஏழாவது சம்பள கமிஷனுக்கு ஒதுக்கீடு செய்வதற்காகத்தான் என கூறப்படுகிறது. 

ஏழாவது சம்பள கமிஷன், அமைப்பது தொடர்பான வேலைகளை, நிதி அமைச்சகம் துவக்கவிட்டது. இதற்கான, காபினட் ஒப்புதலை பெறுவதற்காக, குறிப்பாணை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இன்னும், இரண்டொரு வாரங்களில், அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்குள், கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தற்போதுள்ள நடைமுறைப்படி, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி, கமிஷனுக்கு தலைவராக நியமிக்கப்படுவார். உறுப்பினர்களாக, அதிகாரிகளும், பொருளாதார வல்லுனர்களும் இடம் பெறுவர். இதற்கிடையில், தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் - 1995ன் கீழ், 1,000 ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியமாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.