Pages

Thursday, November 28, 2013

உதவி பேராசிரியர் தேர்வு: பி.எட். கல்லூரி பேராசிரியர்கள் கலக்கம்

தமிழகத்தில் உதவி பேராசிரியர் தேர்வு பணியில் பி.எட்., கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் அனுபவச்சான்று மார்க்கை கணக்கில் எடுக்காததால் ஆயிரக்கணக்கான பி.எட்., கல்லூரி பேராசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


தமிழக அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் 1093 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என சட்டசபையில் அறிவித்தது. நீண்ட இழுபறிக்கு பின் தற்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கியது. முதுகலை பட்டத்துடன் தேசிய தகுதி தேர்வு(நெட்) அல்லது மாநில தகுதி தேர்வு(ஸ்லெட்) இரண்டில் ஏதாவது ஒரு தேர்வில் தகுதி பெற்றிருந்தால் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது.

இந்த தேர்வில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ஒன்பது மார்க்கும், எம்.பில்., பட்டம் பெற்றவர்களுக்கு ஆறு மார்க்கும், அனுபவத்திற்கு அதிக பட்சமாக 15 மார்க் என 24 மார்க்குகளும், நேர்முகத்தேர்வுக்கு 10 மார்க்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 34 மார்க் அடிப்படையில் தேர்வுப்பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் ஒரு ஆண்டுக்கு ஒரு மார்க் மூலம் எத்தனை ஆண்டு பணியாற்றி உள்ளார்களோ அதன் அடிப்படையில் அனுபவச்சான்று மார்க் வழங்கப்படும். உதவி பேராசிரியர் தேர்வில் அனுபவச்சான்று மார்க்கே முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், பி.எட்., கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் அனுபவச்சான்று கணக்கிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பி.எட்., கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 700 பி.எட்., கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் தலா 20 பேராசிரியர்கள் வீதம் சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். சில பி.எட்., கல்லூரி முதல்வர்கள் மூன்று முனைவர் பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் பி.எட்., - எம்.எட்., போன்ற பட்டங்கள் பெறாமல் முனைவர் பட்டங்களுடனே பணிபுரிந்து வருகின்றனர்.

ஆனால், பி.எட்., கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் முனைவர் பட்டங்களுடன், பி.எட்., - எம்.எட்., போன்ற பட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளனர். அதிக கல்வித்தகுதி இருந்தும் இவர்களது அனுபவச்சான்று கணக்கில் எடுக்காததால் உதவி பேராசிரியர் தேர்வில் வெற்றிபெற முடியாத நிலை உள்ளது. இதனால், இவர்களின் அரசு பேராசிரியர் "கனவு" கானல் நீராகும் நிலை உள்ளது.

எனவே, அரசு கலை, அறிவியல், இன்ஜி., கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் அனுபவச்சான்று மார்க்கை கணக்கிடுவது போல பி.எட்., கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் அனுபவச்சான்று மார்க்கையும் கணக்கிட்டு நேர்மையான முறையில் உதவி பேராசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமென பி.எட்., கல்லூரி பேராசிரியர்கள் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.