சிவகங்கை அருகே ஒக்குபட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், இரட்டை அர்த்தத்தில் பேசி பாடம் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. மலம்பட்டி அருகே ஒக்குப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில், 85 மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் உட்பட, நான்கு ஆசிரியர்கள் உள்ளனர்.
வெங்கடாசலம், பாடம் நடத்தும்போது, இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், அரை நிர்வாண சாமியாரின் படங்களை காட்டுவதாகவும், சில மாணவர்கள், பெற்றோரிடம் கூறினர். நேற்று முன்தினம், ஊராட்சி தலைவர் பழனி உள்ளிட்ட சில பெற்றோர், வெங்கடாசலத்தை கண்டித்தனர். அப்போது சிலர், "இனிமேல் பணிக்கு வரக்கூடாது' என மிரட்டினர். இதுகுறித்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்த வெங்கடாசலம், நேற்று, போலீசில் புகார் கொடுத்தார். எஸ்.ஐ., செல்வக்குமார், ஒக்குப்பட்டியில் விசாரித்தார். இப்பிரச்னையால் நேற்று, சில மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் கூறியதாவது: அப்பகுதி மாணவர்களை கல்வியில் உயர்த்த வேண்டும் என, பணி செய்கிறேன். சாமியார் மற்றும் சித்தர்களுக்கு வித்தியாசம் தெரிவதற்காக, சில படங்களின் மூலம் பாடம் எடுத்தேன். இதை தவறாக புரிந்து கொண்டனர். ஆசிரியர் பற்றாக்குறையால், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் உள்ளூர் நபர் ஒருவரை நியமிக்க வலியுறுத்தினர். ஏற்கனவே, இதே பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர், மாணவர்களை அடித்து பிரச்னை ஏற்பட்டதால், மாற்றுப் பணியில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்தேன்; இது, கிராமத்தினருக்கு பிடிக்கவில்லை. இதற்காக என் மீது பழி சுமத்துகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆரோக்கியம் கூறுகையில், ""நேற்று பள்ளி செயல்பட்டது. இப்பிரச்னை குறித்து ஆசிரியர், மாணவர்களிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.