Pages

Thursday, November 21, 2013

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உயர், மேல்நிலைப்பள்ளியில் 232 ஆசிரியர் காலி பணியிடங்களால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நீண்ட நாட்களாக காலியாக உள்ளன. மேலும் சில இடங்களில் பள்ளிக் கல்வித்துறை அனுமதிக்காத ஆசிரியர் பணியிடங்கள் தொடர்ந்து காலியாக உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 232 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 28 அரசு உயர்நிலை, 13 அரசு உதவி பெறும் உயர்நிலை, 34 மேல்நிலை, 17 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 36 அரசு உயர்நிலை, 12 அரசு உதவி பெறும் உயர்நிலை, 30 மேல்நிலை, 11 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன.

இங்கு அனுமதிக்கப்பட்ட 470 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் 122 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 73 இடங்களில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட 1096 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 33 ஆங்கில ஆசிரியர்கள், 87 சமூக அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அனுமதிக்கப்பட்ட 1566 முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 232 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் மார்ச்சில் துவங்கும் பொதுத்தேர்வுக்கு தயாராகும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் மோகன்தாஸ் கூறும்போது: "50 சதவீதம் சீனியாரிட்டி, 50 சதவீதம் நேரடி நியமனம் என பதவி உயர்வளிக்க வேண்டும். முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் கல்வித் தரம் நிச்சயமாக பாதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பணிச்சுமையால், ஆசிரியர்களுக்கும் மன உளச்சல் ஏற்படுகிறது" என்றார்.

தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க, ராமநாதபுரம் கல்வி மாவட்டத் தலைவர் முத்துச்சாமி கூறுகையில், "தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாகவுள்ள பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்பு வகிப்பதால் மாணவர்களுக்கு பாடம் நடத்த இயலாமல் போகிறது. இளநிலை உதவியாளர் பணியிடங்கள் இல்லாத பள்ளிகளில் சம்பளம், இதர செலவின வேலைகளை தலைமை ஆசிரியர்களே கவனிக்க வேண்டியுள்ளது.

கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஆங்கிலம், கணித ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாட வேளைகளில் வகுப்புகளுக்கு செல்ல இயலவில்லை. பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை முன் வரவேண்டும்" என்றார்.

முதன்மை கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது," என்றார்.

1 comment:

  1. உயர்திரு. TN KALVI அன்பரே !!!
    டிஇடி தேர்வு பணிநியமணம் மற்றும் முதுகலை ஆசிரியர் நியமணம் எப்போது ?

    மாணவர்களின் கல்வியில் அக்கரை கொண்டு பணியினை துரிதப்படுத்துமா அரசு ?

    ஒரு மாதத்திற்க்குள் பணிநியணம் என கூறினார்கள் அதற்கான பணி ஏதுவுமே எடுக்க படவில்லையே ?
    ஏன் ?

    டீஇடீ CV எப்போது ?
    பாட வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் எப்போது வெளியாகும் ?

    தயவுகூர்ந்து பதில் அளியுங்கள் ...

    நன்றி !!!

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.