திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுத் துறையில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஏற்பட்டுள்ள குளறுபடியால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. திருவள்ளுவர் பல்கலையில் படிக்கும் சுமார் 4 ஆயிரம் எம்சிஏ மாணவர்களுக்கு படித்துக்கொண்டிருக்கும்போதே புரவிஷனல் சான்றிதழ்கள் அச்சடித்து, அவர்கள் படிக்கும் கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூடி மறைக்கப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான ஆவணங்களின் நகல்களை, பெயர் சொல்ல விரும்பாத ஓர் அதிகாரி அளித்தார்.
அதில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியின் எம்சிஏ மாணவர்களின் சான்றிதழ் மற்றும் பட்டியல் இருந்தது. இந்த நகல்களை கல்லூரி நிர்வாகத்திடம் காட்டியபோது இது உண்மைதான்’ என்று ஒப்புக்கொண்டனர்.
எங்கள் கல்லூரிக்கு பல்கலை சார்பில் வந்த பார்சலில், எம்சிஏ மாணவர்களின் புரவிஷனல் சான்றிதழ்கள் இருந்தன. அந்தச் சான்றிதழ்கள் தற்போது 3-ம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுடையது. இதுதொடர்பாக முறைப்படி பல்கலை நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்து, அந்த புரவிஷனல் சான்றிதழ்களை அனுப்பிவிட்டோம்’’ என்றார் முதல்வர் ராஜலட்சுமி.
திருவள்ளுவர் பல்கலையில் நிலவும் குளறுபடிகளுக்கு துணைவேந்தர்தான் பொறுப்பு. பல்கலைக்கழக தாற்காலிக பணியாளர்களை நம்பாமல், பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் தேர்வு முடிவுகளை பதிவுசெய்து வெளியிடும் ஒப்பந்தத்தை துணைவேந்தர் வழங்கியுள்ளார். இதற்காக அந்த நிறுவனத்துக்கு லட்சக்கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் பொறுப்பற்ற செயலால்தான், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினையை மூடிமறைக்க தாற்காலிக பணியாளர்கள் மீது துணைவேந்தர் பழி சுமத்துகிறார். பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு துறையின் உச்சகட்ட குளறுபடியாக, எம்சிஏ பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் 4 ஆயிரம் மாணவர்களுக்கு புரவிஷனல் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதற்கெல்லாம் யார் பொறுப்பு என்பதை துணைவேந்தர் விளக்கவேண்டும். தமிழக முதல்வர் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகாணவேண்டும்’’ என்றார் திருவள்ளுவர் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் கவுரவத் தலைவர், பேராசிரியர் அய்.இளங்கோவன்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து பல்கலைக் கழக துணைவேந்தர் குணசேகரிடம் கேட்ட தற்கு, படிக்கின்ற எம்சிஏ மாணவர்களுக்கு புரவிஷனல் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட சம்பவம் எனது கவனத்துக்கு வரவில்லை. பல்கலையின் தேர்வுத்துறை மிகவும் பலவீனமாக இருப்பது உண்மைதான். இதனை மறு சீரமைப்பு செய்ய ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். வரும் ஆண்டுகளில் தேர்வுத் துறையில் தவறுகள் நடக்காது’’ என்றார்.
பட்டப்படிப்பு முடியும் முன்பே புரவிஷனல் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பல்கலை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.