மாவட்ட அளவில் குறைதீர் சிறப்பு முகாம்கள் நடத்தி, ஆசிரியர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
கூட்டணியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் அதன் துணைத் தலைவர் எம்.ஆறுமுகம் தலைமையில் ஆவாரங்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளிபாளையம் வட்டச் செயலர் எஸ்.முத்துக்குமரன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் வி.பாலமுரளி, ஜெ.அருள்சுந்தரரூபன், பொதுக் குழு உறுப்பினர் பி.இளையராஜா முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் கே.தங்கவேல் செயலறிக்கை வாசித்தார். முன்னாள் மாநிலப் பொதுச் செயலர் முருக.செல்வராசன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பள்ளிபாளையம் ஒன்றியத்தில் 65-க்கும் மேற்பட்ட பள்ளிகளை நிர்வகிக்கவும், ஆசிரியர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், அரசின் 14 வகையான கல்விசார் திட்டங்களை நிறைவேற்றவும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், அமைச்சுப் பணியாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
பள்ளிபாளையம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரின் வங்கிக் கணக்கை விரிவானத் தணிக்கை ஆய்வுக்குள்படுத்த வேண்டும். ஒன்றிய, மாவட்ட அளவில் ஆசிரியர் குறைதீர் முகாம்கள் நடத்தி, பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும். ஆசிரியர்களுக்கு சனி, ஞாயிறுகளில் பணியிடைப் பயிற்சி, கல்விசார் பணிகளில் ஈடுபடக் கட்டாயப்படுத்தக் கூடாது.
தலைமையாசிரியர், ஆசிரியர்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். பள்ளிகளில் தூய்மை, சுகாதாரத்தைப் பேணி காக்கத் துப்புரவுப் பணியாளர், காவலர், நடந்தாட்டி, உதவியாளர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.
ஆசிரியர் பணி நியமனத்துக்கு லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், தாற்காலிகத் தொகுப்பு ஊதிய அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். கூட்டத்தில், கூட்டணியின் ஈரோடு மாவட்டச் செயலர் யு.கே.சண்முகம், மாவட்ட துணைத் தலைவர் ஆ.சரவணன், துணைச் செயலர் பி.மாரிமுத்து, வட்டத் தலைவர் பி.கண்ணன், பொருளாளர் எம்.ஜிலானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.