Pages

Wednesday, October 16, 2013

நேர்முகத் தேர்வா? பதற்றம் வேண்டாம்...

முதன்முதலாக நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளப் போகிறவர்களில், பதட்டத்தை அனுபவிக்காத நபர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த முதல் நிகழ்வை, பலரால் தங்களின் வாழ்வில் பல காலங்கள் மறக்க முடியாது.

தாங்கள் கலந்துகொள்ளும் முதல் நேர்முகத் தேர்வில், அது நடைபெறும் அறைக்கு வெளியே, தங்களுக்கான அழைப்பிற்கு காத்திருக்கையில், படபடப்புடன் இருப்பர். சிலர் அவ்வப்போது கை கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பர். சிலர் அங்கேயும் இங்கேயும் எழுந்து சென்று வந்து கொண்டிருப்பர். சிலர் அருகில் இருப்பவருடன்கூட பேசாமல், அமைதியாக அமர்ந்திருப்பர். சிலருக்கு, வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருக்கும்.

சிலர், நேர்முகத் தேர்வு முடிந்து வெளியே வரும் நபர்களிடம், என்னென்ன கேள்விகள் கேட்டார்கள்? உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பார்கள். சிலர், நம்மை எந்த கேள்விகள் கேட்டால், அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

எல்லாம், நீங்கள் அழைக்கப்படும் வரைதான். அதன்பிறகு நேரம் விரைந்து நகர்ந்துவிடும். அதன்பிறகு, முடித்து வெளியே வரும்போது, ஏதோ ஒரு பெரிய பாறாங்கல்லை இறக்கி வைத்தாற்போன்று உணர்வீர்கள். ஏதோவொரு பெரிய நெருக்கடியிலிருந்து விடுபட்டது போன்று இருக்கும்.

மற்றபடி, ஒரு சில நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டுவிட்டால், அதன்பிறகு, யாருக்கும் அந்தளவு பதட்டம் ஏற்படாது. பொதுவாக, ஒரு வேலை கிடைத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடி இருந்தால், அது எத்தனையாவது நேர்முகத் தேர்வாக இருந்தாலும், பதற்றம் ஏற்படுவது இயல்பே.

சிலருக்கோ, எத்தனை நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டாலும், ஒவ்வொரு நேர்முகத் தேர்வையும் புதியது போலவே உணர்வார்கள். அவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் அவஸ்தைதான்.

இத்தகைய பதற்றத்தை தணிக்க....

நேர்முகத் தேர்வுக்கு முன்னதாக, நன்றாக தண்ணீர் குடிக்கலாம். மேலும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து நிதானமாக வெளியே விடும் பயிற்சியை சாதாரணமாக செய்யலாம்.

நேர்முகத் தேர்வு என்பது ஒரு போர்க்களமல்ல. நமக்கான பணி வாய்ப்புக்கான ஒரு சந்திப்பு மட்டுமே என்ற அளவில் மனதில் எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நடப்பது நடக்கட்டும் என்ற மனோநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தியானம் மற்றும் யோகாசனம் போன்ற பயிற்சிகள் நமது டென்ஷனைக் குறைப்பதற்கான சிறந்த வழிகள். தியானம் செய்வதென்பது உடனடியாக கைக்கூடும் கலையல்ல. அதற்கான தொடர்ச்சியான பயிற்சி அவசியம். மேலும், தியானம் மற்றும் யோகாவை நேர்முகத் தேர்வு நெருங்கும் சமயத்தில் மட்டும் செய்வதும், மற்ற நேரங்களில் கைவிட்டு விடுவதும் நல்லதல்ல.

அவற்றை தொடர்ச்சியாக செய்து வந்தால்தான், நாம் தேவையான மன ஆற்றலை பெறுவோம். அந்த ஆற்றல் நம்மிடையே நிரந்தரமாக இருக்கும். யோகா மற்றும் தியானத்தின் மூலமாக, நாம் மன ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் பெறுவோம் என்பதை நினைவில் கொள்க.

தியானம் மற்றும் யோகா மூலமாக, நினைவுத்திறன், நேர்மறை சிந்தனை, மனோதிடம், விடாமுயற்சி போன்ற பண்பு நலன்கள் உங்களுக்குள் உருவாகும்.

எப்போது தொடங்கலாம்?

இத்தகைய பயிற்சிகளைத் தொடங்க, எந்த வயது சரியானது என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படலாம்.

ஒருவரின் டீன்-ஏஜ் முடிவடையும் தருவாயில் இந்தப் பயிற்சிகளைத் தொடங்கலாம். 20களின்(வயது) தொடக்கத்திலும் பயிற்சி ஆரம்பிக்கலாம்.

இதன்மூலம், ஒருவர் தனது 20களின் இறுதி மற்றும் 30களின் ஆரம்ப காலங்களில், நல்ல மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியம் கொண்டவராக விளங்கி, வாழ்க்கையில் எதையும் சந்திக்கலாம் என்ற துணிவுடன் திகழ்வார். அப்போது, நேர்முகத் தேர்வு என்பது அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.