பள்ளி தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பாசிரியர்கள், "ஆப்சென்ட்" ஆவதை தவிர்க்கும் பொருட்டு, விடுமுறை நாட்களில், அவர்களை சிறப்பு வகுப்புகள் எடுக்க, பயன்படுத்தி கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு, கடந்த 2011-12ல், ஓவியம், விளையாட்டு, கணிப்பொறி, தையல், தோட்டக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய பாடங்களை நடத்துவதற்கு,16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில், சம்பள பிடித்தம் செய்யப்பட்டது. மேலும், தலைமை ஆசிரியர்கள் வழியாக சம்பளம் வழங்கப்பட்டதால், முறையான சம்பளம் வழங்கப்படவில்லை, என்ற குற்றச்சாட்டை, பகுதி நேர ஆசிரியர்கள் கூறி வந்தனர்.
இதையடுத்து, இவர்களின் பணி வரன்முறை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை, அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குனரகம், முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ளது. இதன்படி, பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஒவ்வொரு மாதமும், 12 அரை நாட்கள், கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும். இவர்களுக்கு, கால அட்டவணை முன்கூட்டியே வழங்க வேண்டும்.
தொடர்ச்சியாக ஒரு மாதத்தில் 12 நாட்கள், தலைமை ஆசிரியர்கள் வேலை வாங்க கூடாது. வாரத்துக்கு மூன்று அரை நாட்கள் வீதம், நான்கு வாரத்துக்கு 12 அரை நாட்கள் கண்டிப்பாக பணிபுரிந்திருக்க வேண்டும். முந்தின மாதத்துக்குரிய சம்பளம், வருகிற மாதம், ஐந்தாம் தேதிக்குள், வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாதத்துக்கும், வராத நாட்களுக்குரிய ஊதியம், பிடித்தம் செய்யப்பட வேண்டும்.
இரண்டு அரை நாட்களுக்கு பதில், ஒரு முழு நாள் வேலை செய்ய கூடாது. தேர்வு விடுமுறை நாட்களின்போது, பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருப்பின், விடுமுறை நாட்களில், சிறப்பாசிரியர்களை வரவழைத்து, படிப்பில் பின்தங்கிய மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தல், அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்டவைக்கு பயன்படுத்தலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.