"மறைந்த தலைவர்களின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை ஆசிரியர்கள் பாடத்தோடு கலந்து கற்பிக்கும்போது, மாணவர்களிடையே கற்கும் ஆர்வம் அதிகரிக்கும்" என, ஆசிரியர் பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.
ஆனைமலை அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு குறித்து பயிற்சி நடந்தது. ஆனைமலை வட்டார வள மேற்பார்வையாளர் அருணாதேவி துவங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர்கள் அமிர்தவல்லி, ஹேமலதா, விசாலாட்சி, அம்சராணி, சத்தியமூர்த்தி மற்றும் விஜய பாஸ்கர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் குழந்தைகளுக்கு சமூக விழிப்புணர்வை வளர்த்தல், நன்னெறி முறையில் வாழும் திறன், ஜனநாயகப் பண்புள்ள குடிமக்களை உருவாக்கும் திறன், கணினி மூலம் ஏற்படும் நன்மை, தீமைகள், இணையம் மூலம் நல்லவற்றை தேர்தெடுத்து படிப்பது, இணைய சீர்கேடுகளிலிருந்து தன்னை தானே பாதுகாத்து கொள்வது பற்றி பயிற்சியளிக்கப்பட்டது. இதில் 100க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பயிற்சியில் அதிகாரிகள் பேசியதாவது: "இன்றைய காலகட்டத்தில், மாணவர்களிடையே மல்டி மீடியாக்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அவற்றை தவறான முறையில் பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தற்காலத்தில் மொபைல் போன்களில் ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இதனை கண்காணித்து தடுக்கும் பொறுப்பு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மொபைல்போன் பயன்பாடுகள் குறித்து அறிந்து கொள்வது நல்லது.
தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கு தகுந்த நிகழ்சிகளை மட்டுமே பார்க்க வலியுறுத்த வேண்டும். பசிக்கு உணவு அளிப்பது அறம்; உணவோடு படிப்பையும் அளிப்பது அறிவாளித்தனம் என்பதை அறிந்த, மறைந்த தலைவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தனர்.
சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை இன்றைய காலகட்டத்தோடு தொடர்பு படுத்தி மாணவர்களுக்கு நாட்டுபற்றையும், நேர்மையையும் வளர்க்க வேண்டும்." இவ்வாறு, அவர்கள் பேசினர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.