தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு நாள் முழுவதும் பள்ளியில் தங்கி ஆண்டாய்வு மேற்கொள்ள வேண்டும் என உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் பள்ளிகளில் ஆண்டு ஆய்வு செய்து அறிக்கை வழங்குவது வழக்கம்.
இப்போது விரைவில் ஆண்டாய்வு தொடங்கவுள்ள நிலையில் ஆண்டாய்வு செய்வது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் டாக்டர் இளங்கோவன் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''ஒவ்வொரு யூனியனிலும் வாரத்திற்கு 2 பள்ளிகள் வீதம் ஆண்டாய்வுகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளியில் ஒரு நாள் முழுவதும் (பள்ளி வேலை நேரம்) தங்கி ஆண்டாய்வு மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் கல்வி தரம் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சிறப்பாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளியில் மாணவர்களிடம் 2 மணி நேரம் கலந்துரையாட வேண்டும். இலவச சைக்கிள், இலவச சீருடை உள்பட அரசின் நலத்திட்ட உதவிகள் மாணவர்களை சென்றடைந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்க கூடிய திறந்த வெளி கிணறு, உயர் மின் அழுத்த கம்பங்கள், பழுதடைந்த கட்டடங்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். தொடர்ந்து அந்த குறைகள் நீக்கப்பட்டதா என்பதை கண்காணிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.