தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. நகரம் மற்றும் அக்கம் பக்கம் கிராமப் புறத்தைச் சேர்ந்த சுமார் 1200 மாணவ மாணவியர் அங்கு பயின்று வருகின்றனர். இதன் தலைமை ஆசிரியர் ஜிந்தா மதார் பக்கீர். தற்போது பள்ளியில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் வரலாறு தேர்வு நடந்தது அப்போது ப்ளஸ் 1 மாணவர்கள் தேர்வு எழுதும் வகுப்பறையிலிருந்து மது வாடை வீசவே, ஆசிரியர்கள் அங்கு வந்து விசாரித்தபோது வரலாற்றுப் பிரிவின் ப்ளஸ்1 மாணவன் ஒருவன் மது அருந்தி விட்டு முழு போதையில் பரீட்சை எழுத வந்திருப்பது தெரிய வந்தது. அவனிடம் விசாரித்த போது போதை மயக்கத்தில் பேசமுடியாத அந்த மாணவன் பெஞ்சில் தலைவைத்து படுத்து விட்டான். 16 வயதான அந்த மாணவன் பக்கத்தில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து பள்ளிக்கு வருபவன் (அவனது எதிர்காலம் கருதி மாணவனின் பெயர் குறிப்பிடவில்லை)
மாணவனின் நிலை, குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஜிந்தா மதார் பக்கீர் மாவட்டக் கல்வி அதிகாரிகள், கலெக்டர் மற்றும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
போலீசார் மாணவனிடம் நடத்திய விசாரணையில், மது குடித்து விட்டு வந்ததை அவன் ஒப்புக் கொண்டான். மேலும், இது தொடர்பாக கோவில்பட்டி தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் பாஸ்கரன் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். மாணவனின் பெற்றோரும் வரவழைக்கப்பட்டு அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்தமைக்காக மாணவனை வரும் அக்டோபர் 3 வரை 20 நாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர் அதிகாரிகள். கடந்த ஆண்டு இது போல் குடித்து விட்டு பள்ளிக்கு வந்த மாணவன் ஒருவன் டிஸ்மிஸ் செய்யப்பட்டான். மேலும் இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்த உள்ளார்.
மாணவனைக் குறை சொல்வதில் என்ன இருக்கிறது?. பள்ளியின் சொற்ப தொலைவிலேயே மதுக்கடைகள் இருப்பது இது போன்ற செயல்களுக்கு பாதை போடத்தானே செய்யும் என்று வேதனையோடு குறிப்பிட்டார் கழுகுமலை நகரின் சமூக ஆர்வலர், ஒருவர்.
போதையில் மாணவன் பள்ளிக்கு வந்த சம்பவம் கழுகுமலை வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.