"பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆகஸ்ட் மாத உழைப்பூதியத்தை, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாவட்ட செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாவட்டச் செயற்குழு மற்றும் செப்டம்பர், 25ல், சென்னை மறியல் போராட்ட தயாரிப்புக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.
மாவட்டத் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் நடராஜன் வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் தனசேகரன், துணைச் செயலாளர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் நடேசன் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், அறிவிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகியும், ஆறாவது ஊதியக்குழுவில், தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்டது, அதில் காணப்படும் இடைநிலை ஆசிரியர்களின் குறைகளை தீர்க்கவில்லை. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். சென்னையில், செப்டம்பர், 25 முதல், தொடர்ந்து தினமும், 5,000 ஆசிரியர்கள் பங்கேற்று கோரிக்கைகள் நிறைவேறும் வரை, கோட்டையை முற்றுகையிட்டு நடக்கும் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, 500 ஆசிரியர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
சென்னையில் நடக்கும் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஆசிரியர்களை தயார்படுத்தும் வகையில், செப்டம்பர், 16 முதல், 21 வரை மாவட்டம் முழுவதும், 15 யூனியன்களில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தல், தெருமுனை பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
நாமக்கல் யூனியனில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆகஸ்ட் மாத உழைப்பூதியம், செப்டம்பர், 15ம் தேதி வரையிலும் பெற்று வழங்காத அலட்சியப் போக்கை தவிர்த்து, உடனடியாக உழைப்பூதியம் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட பொருளாளர் சேகர், சேந்தமங்கலம், எலச்சிப்பாளையம், பள்ளிபாளையம், கொல்லிமலை, மோகனூர், புதுச்சத்திரம் வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.