Pages

Friday, September 27, 2013

44 மாதிரி பள்ளிகளில் "நேர்மை கடைகள்": காந்தி பிறந்த நாளில்ஆரம்பம்

மாணவர்களிடையே, நேர்மையை வளர்க்கும் நோக்கத்தில், காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடைகள்" துவக்கப்படுகின்றன.கல்வி தரத்தை மேம்படுத்தவும்,மாணவர்களிடையே, நல்ல குணங்களை ஏற்படுத்தவும், கல்வித்துறை, முடிந்த அளவிற்கு, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.
இந்த வரிசையில், மாணவர்களிடையே, நேர்மை, நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் நோக்கத்தில், 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடை"களை திறப்பதற்கு, இடைநிலைக் கல்வி திட்ட மாநில இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.இதுகுறித்து, திட்ட இயக்குனர், சங்கர், வெளியிட்டுள்ள அறிவிப்பு:பள்ளி சூழலில், மாணவர்களை, சிறந்த குடிமகன்களாக உருவாக்க முடியும். கல்வி மட்டுமில்லாமல், பல்வேறு திறன்களையும், நற்குணங்களையும் வளர்ப்பதற்கு, கல்வித்துறை, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த வரிசையில், நேர்மை மற்றும் நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் நோக்கில், "நேர்மை அங்காடி" என்ற கடைகள், காந்தி பிறந்த நாளான, அக்., 2ல், 44 மாதிரிப் பள்ளிகளிலும் துவங்கப்படும். இந்த கடைகள், யார் மேற்பார்வையும் இல்லாமல், பள்ளி வளாகத்தில் இயங்கும். இந்த கடையில், மாணவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள் இருக்கும். அதற்கான விலை தாங்கிய அறிவிப்பும், அங்கே இருக்கும்.மாணவர்கள், நேரடியாக, கடைகளுக்குச் சென்று, தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்கான தொகையை, அங்குள்ள பண பெட்டியில் செலுத்த வேண்டும். ஆரம்ப கட்ட முதலாக, 500 ரூபாயுடன், கடையை துவக்க வேண்டும். பள்ளி மேலாண்மை நிதியில் இருந்து, இந்த தொகையை, தலைமை ஆசிரியர் செலவழிக்கலாம்.பேப்பர், பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களை, "நேர்மை கடை"யில் விற்பனை செய்ய வேண்டும். பொருட்களின் விலையை, எந்த காரணம் கொண்டும், லாப நோக்கில் நிர்ணயம் செய்யக் கூடாது. வாங்கிய விலையிலேயே, பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இதை, தலைமை ஆசிரியர், கண்காணிக்க வேண்டும்.இது குறித்த அறிக்கையை, அக்., 4ம் தேதிக்குள், இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.