"அனைவரும் செய்தி வாசிக்கும் மரபை, தினமலர் நாளிதழ் ஏற்படுத்தி இருக்கிறது. அதன் சேவை, தமிழ் சமூகத்துக்கு முக்கியமானது" என கனடா நாட்டு டொரண்டோ பல்கலைகழக, மானுடவியல் பேராசிரியர், பிரான்சிஸ் கோடி கூறினார்.
டீக்கடைகளில் செய்தி புழக்கமும், எதிரொலியும்&' என்ற தலைப்பில், சிறப்பு கருத்தரங்கம், நேற்று சென்னை பல்கலை இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் நடந்தது. கனடாவிலுள்ள டொரண்டோ பல்கலைகழக, மானுடவியல் பேராசிரியர், பிரான்சிஸ் கோடி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் தலைவர், கோபால் ரவீந்திரன், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கருத்தரங்கில், துறை மாணவர்கள், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள, டீக்கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள் குறித்தும், அங்கு விவாதிக்கப்படும் செய்திகள் குறித்து, ஆய்வு செய்து, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
கருத்தரங்கில், பேராசிரியர், பிரான்சிஸ் கோடி பேசியதாவது: தமிழகத்தில், டீக்கடைகள் என்பது, சமூகத்தில் முக்கியமான பொதுத்தளமாக விளங்குகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் விளங்கும், பண்பாட்டு பொருளாதார மாற்றங்களை, பிரதிபலிப்பவையாக உள்ளன.
சமூகத்தில் நடக்கும் பல மாற்றங்களும், சமூகம் உருவாக்கும் கருத்தியல்களும், மக்கள் ஒன்று கூடும் இடங்களில் வெளிப்படும். தமிழகம் போன்ற, பல தன்மை கொண்ட சமூகத்தில், டீக்கடை உருவாக்கும் சமூகம், மக்களின் நினைவுகளில் புதைந்து கிடக்கும், கடந்த கால நிகழ்வுகளின் வெளிப்பாடாகவே இருக்கிறது.
அதனால், தமிழகத்தில் இரட்டை குவளை முறை உருவானது. கடந்த கால நினைவுகளின் எச்சமே, இன்று புழக்கத்தில் இருக்கிற பிளாஸ்டிக் கப்புகள். டீக்கடைகளுக்கு பெண்கள் அரிதாகவே வந்தாலும், ஆண்களின் பொதுத்தளமாக செயல்படுவதால், பெண்கள் அதில் பங்கு கொள்வதில்லை.
ஆண்கள், பத்திரிகைகளை, குழுவாக ஒன்று சேர்ந்து, சத்தமாக வாசிக்கும் போது, அரசியல், சினிமா, அக்கம் பக்கத்தில் உள்ள நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை, கலந்துரையாடி, அது பற்றிய செய்திகளை அறிந்து கொள்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இருந்து, டீ கடைகளில், பத்திரிகை முக்கிய அங்கமாக இருந்து வந்தாலும், சமீப காலத்தில், பத்திரிகைகளிலே, டீக்கடை விவாதமாகவே செய்திகள் இடம் பெறுகின்றன.
கடந்த, 1997ல் இருந்து, தினமலர் நாளிதழ், "டீக்கடை பெஞ்ச்" என்ற பகுதியை, பிரசுரித்து வருகிறது. அதில் நான்கு ஆண்கள், அரசியல், சினிமா, பிரபலங்கள் மற்றும் உலக நடப்பு நிகழ்வுகளை பேசுவதை, பேச்சுமொழியில் செய்தியாக பிரசுரித்து வருகிறது.
கடந்த, 18ம் நூற்றாண்டில், ஜெர்மானிய சமூகவியல் அறிஞர், ஹெர்பர்மாஸ், லண்டனில் உள்ள, "காபி கிளப்&'கள், மக்கள் கூடும் தளத்தினை எவ்வாறு உண்டாக்குகிறது. அது உருவாக்கும் தொடர்பியல் செயல்முறைகள் பற்றி, "பொது ஒருங்கமைவு" என்ற ஆய்வில், விவரித்தார்.
ரஷ்ய அறிஞர், பாக்டின் கருத்துப்படி, தினமலர் நாளிதழ் உருவகம் செய்யும், "டீக்கடை பெஞ்ச்" செய்தி பகுதி, டீக்கடைகளின், பிரதியாகவே உள்ளது. வீட்டிற்குள் மவுனமாக வாசிக்கும் பழக்கத்தை தாண்டி, பொது இடங்களில், சத்தமிட்டு வாசிக்கும் மரபை உண்டாக்கியதில், "தினத்தந்தி" மற்றும் "தினமலர்" நாளிதழ்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
வெளிநாட்டு அறிஞர்களின் வரையறையை கொண்டு தமிழ் பத்திரிகைகளை, பார்ப்பதை தவிர்த்து, புதிய நோக்கில் அணுக வேண்டும். அனைவரும் செய்தி வாசிக்கும் மரபை, தினமலர் உள்ளிட்ட நாளிதழ்கள் ஏற்படுத்தி இருக்கின்றன. அவற்றின் சேவை, முக்கியமானது. இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.