Pages

Friday, August 23, 2013

ஸ்ரீரங்கம் தொகுதியில் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி துவக்கம்

ஸ்ரீரங்கம் தாலுகாவிற்குட்பட்ட, நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியை, முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம், திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில், மேம்படுத்தப்பட்ட சட்ட உயர்கல்வி வழங்க, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகாவிற்குட்பட்ட, நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தில், தேசிய சட்டப்பள்ளி அமைக்க, 2011, ஜூலை, 7ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2012ல், தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி சட்டம் இயற்றப்பட்டது.

இச்சட்டத்தின்படி, தேசிய சட்டப்பள்ளிக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வேந்தராகவும், சட்டத் துறை அமைச்சர் இணை வேந்தராகவும் செயல்படுவர். நாவலூர் குட்டப்பட்டில், 25 ஏக்கர் பரப்பளவில், தேசிய சட்டப்பள்ளி அமைக்க, 2012, பிப்ரவரி, 13ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

முதல்வர் தேர்வு செய்த வடிவமைப்பில், துணைவேந்தர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன், 19 வகுப்பறைகள், மூன்று விரிவுரை அரங்குகள், மூன்று கருத்தரங்கு அரங்குகள், மாணவ, மாணவியர் விடுதி, ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி மையம், நூலகம், முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கான விடுதி, விருந்தினர் இல்லம், தேர்வு அரங்கு, துணைவேந்தர் குடியிருப்பு, பிற குடியிருப்புகள், உள் விளையாட்டரங்கம், தடகள விளையாட்டு மைதானம், ஆகியவை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில், நடப்பு கல்வியாண்டு, வெளிநாடு வாழ் இந்தியருக்கென ஒதுக்கப்பட்ட, 10 இடங்களையும் சேர்த்து, 100 மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர். வீடியோ கான்பரன்ஸ் புதிய சட்டப் பள்ளியை, சென்னை, தலைமைச் செயலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் மூலம், முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

பின், ஏழு மாணவர்களுக்கு, சேர்க்கை அனுமதி ஆணை வழங்கினார். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், ஐந்து மாணவர்களுக்கு, சேர்க்கை அனுமதி ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஐகோர்ட் நீதிபதிகள் ஜெய்சந்திரன், தனபாலன், சட்டத் துறை அமைச்சர் முனுசாமி, கதர் மற்றும் கிராம தொழில் துறை பூனாட்சி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.