Pages

Friday, August 2, 2013

ஆசிரியர் இன்றி தவிக்கும் மலை கிராமப் பள்ளி

மலைகிராம பள்ளிக்கு போதிய ஆசிரியர் நியமிக்கப்படாததாலும், நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வாரத்தில் ஓரிரு நாள் மட்டும் வந்து செல்வதாலும், மலை கிராம குழந்தைகளுக்கு கல்வி வசதி என்பது எட்டாக்கனியாகி விட்டது.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்டது, கடம்பூர் வனப்பகுதி. அடர்ந்த மலைப்பகுதியான கடம்பூரில் இருந்து, எட்டு கிலோ மீட்டருக்கு அப்பால், மல்லியம்மன் துர்க்கம் கிராமம் உள்ளது. டூவீலர்கள் கூட செல்ல முடியாத, பாறையுடன் கூடிய நடைபாதை மட்டுமே உண்டு.

இங்கு, 150க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் இருந்து, மூன்று கிலோ மீட்டர் சுற்றுப்பகுதிக்குள், 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில், 1985 முதல் யூனியன் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. ஆண்டுக்கு, 15 முதல், 20 பேர் வரை தொடர்ந்து படிக்கின்றனர்.

மல்லியம்மன் துர்க்கம் வனப்பகுதியில், யானை, கரடி உள்ளிட்ட விலங்குகள் வசிப்பதால், இப்பகுதியினர் மலையில் இருந்து இறங்கி, ஆபத்தை கடந்து, வேறு இடங்களுக்கு சென்று கல்வி பெற ஆர்வம் காட்டுவதில்லை.

இப்பள்ளியில் உள்ள, ஐந்து ஆசிரியர் பணியிடத்தில், இரண்டு அல்லது மூன்று ஆசிரியரே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும், வாரத்தில் ஓரிரு நாள் வந்து, இரவில் அங்கு தங்கிவிட்டு, மறுதினமும் வகுப்பு எடுத்துவிட்டு சென்றுவிடுவர்.

பிற நாள்களில் பள்ளியை திறக்கக்கூட ஆள் இல்லை. மேலும், பள்ளி கட்டிடம் கட்டி, பல ஆண்டு ஆவதால், இடியும் நிலையில் உள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்கள், வனச்சிறு பொருட்கள் சேகரித்து, விற்பனைக்கு கொண்டு செல்வதால், குழந்தைகளையும் பெரும்பாலும் உடன் அழைத்து செல்கின்றனர்.

மாணவர்கள் காட்டுக்கு வனப்பொருட்கள் சேகரிக்க சென்ற நேரத்தில், பாடம் நடத்த ஆசிரியர்கள் வந்தால், மாணவர்களுக்கு கல்வி கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. கடம்பூரில் உள்ள அரசு பள்ளியுடன், எஸ்.டி., மாணவ, மாணவிகளுக்கான விடுதியும் உள்ளது.

ஆனால், இம்மக்களுக்கு, மலைவாழ் மக்கள் என சான்று வழங்க, அரசு மறுப்பதால், இம்மாணவர்கள் அந்த விடுதியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மல்லியம்மன் துர்க்கத்தில் உள்ள பள்ளியை என்றாவது திறந்து ஆசிரியர் பாடம் நடத்துவார். மலைவாழ் மக்களுடன், நகரப்பகுதியில் இருந்து வரும் ஆசிரியர்கள் இணைந்து வாழ்வது சாத்தியமற்றது.

என்றாவது, ஒரு நாள் வந்து செல்லும் ஆசிரியரால், இம்மாணவர்களுக்கு முழுமையாக கல்வி கிடைக்காது. எனவே, இம்மலைப்பகுதியில் உள்ள படித்தவர்களுக்கு, இதுபோன்ற பள்ளிக்கான ஆசிரியர் பணியை வழங்கி, மலைவாழ் மக்களுக்கு முழுமையான கல்வி கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடம்பூரில் உள்ள விடுதியில் தங்கிப்படிக்க, இங்குள்ள குழந்தைகளுக்கு எஸ்.டி., சான்று வழங்க வேண்டும். அல்லது, விடுதிக்கான விதியை தளர்த்த வேண்டும். பண்ணாரி அம்மன் கல்லூரி சார்பில் வழங்கப்பட்ட நான்கு சோலார் விளக்கு தவிர, இப்பகுதியில் மின்வசதி இல்லை.

இரவில் குழந்தைகள் படிக்க வாய்ப்பில்லை. மின்வசதி ஏற்படுத்த வேண்டும்.
இங்குள்ள பள்ளிக்கு வழங்கப்பட்ட லேப்டாப், ஆசிரியர்கள் வீட்டில் பயன்பாட்டில் உள்ளது. இப்பள்ளி வளர்ச்சிக்கும், மாணவர்களுக்கும் பல சிறப்பு நிதி ஒதுக்கப்படுகிறது.

ஆசிரியரே வராத இப்பள்ளியின், நிதி மட்டும் ஆண்டுக்கணக்கில், கணக்கு காட்டப்பட்டு முழுமையாக கையகப்படுத்தப்படுகிறது, என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.