ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் அதனடிப்படையிலான பணி நியமனத்தில், இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும், 10 ஆயிரம் பேர், முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, பொதுச் செயலர், பிரின்ஸ் கஜேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில், டி.ஆர்.பி., நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும் தேர்ச்சி விகிதம், 60 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு,இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், அரசு,மதிப்பெண் தளர்வு வழங்கலாம் என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருந்தும் இப்பிரிவினருக்கு, மதிப்பெண் தளர்வு வழங்கவில்லை.
இது இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது; ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது அரசு வேலைக்கான தேர்வு மட்டும் அல்ல. இதில் தேர்ச்சி பெற்றால் தான், தனியார் பள்ளிகளிலும் வேலை செய்ய முடியும். மதிப்பெண் தளர்வு வழங்காதது, ஒடுக்கப்பட்ட மக்களின் வேலைவாய்ப்பை தட்டி பறிக்கும் செயல். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது.
எனவே, தமிழகத்தில் பின்பற்றப்படும், 69 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில், ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும். அதற்கான ஆணையை, தமிழ் நாடு ஆசிரியர் தேர்வாணையத்திற்கு, அரசு பிறப்பிக்க வேண்டும்.
கடந்த 2012, அக்டோபரில், அரசு வெளியிட்ட, அரசாணை, 252ல், இடஒதுக்கீட்டின் அடிப்படையில், தகுதியை நிர்ணயிக்காததால், இந்த அரசாணை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது.
மத்திய அரசு கூட, தன் அலுவலக குறிப்புகளில், இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என, கூறுகிறது. எனவே, எல்லா வகையிலும், முரணாக உள்ள, இந்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும், 10 ஆயிரம் பேர், முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரன் கூறினார்.
No comments:
Post a Comment