Pages

Monday, July 22, 2013

மாணவ, மாணவியருக்கு சுதந்திர தினத்தன்று சீருடை கிடைக்கும்

சுதந்திர தினத்தன்று, அரசு பள்ளி மற்றும் விடுதி மாணவ, மாணவியர், புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, அவர்களுக்கு இரண்டாவது, "செட்" சீருடை, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில், மதியம் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, அரசு சார்பில், இலவச சீருடை வழங்கப்படுகிறது. அதேபோல், அரசு விடுதிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும், இலவச சீருடை வழங்கப்படுகிறது.

இவர்கள் அனைவருக்கும், நான்கு, "செட்" சீருடை வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு, நடப்பாண்டு, ஒரு, "செட்" சீருடை வழங்கப்பட்டு உள்ளது.

இவர்களில், 13 லட்சம் மாணவியருக்கு பாவாடை, 10 லட்சம் மாணவியருக்கு சுடிதார், 25 லட்சம் மாணவர்களுக்கு டவுசர் மற்றும் பேன்ட் வழங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு சீருடை தைப்பதற்கு, 1.45 கோடி மீட்டர் துணி பயன்படுத்தப்பட்டு உள்ளது.

முதல்வர் அறிவித்தபடி, நான்கு, "செட்" சீருடைகளை, நான்கு தவணைகளாக வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அதன்படி, பள்ளி துவங்கியதும், முதல், "செட்" சீருடை வழங்கப்பட்டது. அடுத்து சுதந்திர தினத்தன்று, மாணவ, மாணவியர் புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, இரண்டாவது, "செட்" சீருடை, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.

மூன்றாவது, "செட்" சீருடை தீபாவளிக்கும், நான்காவது, "செட்" சீருடை, குடியரசு தின விழாவிற்கும் வழங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை, அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.

இதுகுறித்து, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இம்முறை தரமான சீருடை வழங்கப்பட்டு உள்ளது. ஒரு, "செட்" சீருடைக்கு, 300 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இரண்டாவது, "செட்" சீருடை வினியோகம், அடுத்த வாரம் துவங்க உள்ளது.

அனைத்து மாணவ, மாணவியருக்கும், உடனடியாக சீருடை கிடைக்க ஏற்பாடு செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.