Pages

Friday, June 28, 2013

அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு அரசு பரிசு எப்போது? - நாளிதழ் செய்தி

பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு, அரசு பரிசுத் தொகை, இன்று வரை வழங்கப்படவில்லை.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய, ஆதிதிராவிடர் ஆகிய, மூன்று பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவியரில், பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில், முதல், மூன்று இடங்களை பெறுபவருக்கு, முறையே, 50, 30, 10 ஆயிரம் ரூபாய், பரிசாக வழங்கப்படும்.

அதே போல், பிளஸ் 2 தேர்வில், 25 பாடங்களில், முதல் இடங்களை பெறும், மூன்று பிரிவு மாணவருக்கும், ஒவ்வொரு பாடத்துக்கும், 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல், மூன்று இடங்களில் வருபவருக்கு, முறையே, 6,000, 4,000, 2000 ரூபாய் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்வில், மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பெறும், மூன்று பிரிவு மாணவருக்கு, முறையே, 25, 20, 15 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும். அதே போல், ஒவ்வொரு பாடத்திலும், முதலிடம் பெறும், மூன்று பிரிவு மாணவருக்கும், ஒரு பாடத்துக்கு, 1,000 ரூபாய் வீதம் வழங்கப்படும்.

இதன் மூலம், மாநில அளவில், 126 பேர்; மாவட்ட அளவில், 256 பேர் என, மொத்தம், 382 பேர் பயன் பெறுவர். தேர்வு முடிவுகள் வெளியாகி, அனைத்து கல்லூரிகளிலும், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இந்நிலையில், பரிசுத் தொகையை விரைவில் வழங்கினால், மாணவருக்கு உதவியாக இருக்கும். இது குறித்து, ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், "அதற்கான பணி நடந்து வருகிறது. விரைவில் வழங்கப்படும்" என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.