Pages

Wednesday, June 26, 2013

அரசாணை பிறப்பித்தும் உதவி பேராசிரியர் நியமனம் இல்லை

அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஓராண்டுக்கு முன் அரசாணை வெளியிட்டும், பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

தமிழகத்தில், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். 2007ல் இருந்து, இக்கல்லூரி களில், உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

எனவே, "2006-12ம் ஆண்டு வரை, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள, 3,120 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்" என தமிழக அரசு அறிவித்தது; 2012, மே மாதம், அரசாணை வெளியானது.

இப்பணிக்கு, பி.எச்டி., பட்டம் பெற்றவர் அல்லது எம்.பில்., பட்டத்துடன், "நெட், ஸ்லெட்" தேர்ச்சி பெற்றவர், தகுதியுடையவர் என, அறிவிக்கப்பட்டது. உதவி பேராசிரியர் தேர்வை ஆய்வு நடத்தி, அரசுக்கு அறிக்கை அளிக்க, கல்லூரி கல்வி இணை இயக்குனர் மற்றும் இரண்டு அரசு கல்லூரி முதல்வர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிலை குறித்து அறிய, ஒவ்வொரு கல்லூரிக்கும் இக்குழு சென்றது. ஆனால், இக்குழு அமைக்கப்பட்ட பின்பும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நிரப்ப வேண்டிய, 3,120 உதவி பேராசிரியர் பணியிடங்களில், 300க்கும் குறைவான பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

இக்குழு, "கவனிக்க"படும், குறிப்பிட்ட கல்லூரிக்கு மட்டும் செல்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து, பல்கலைக் கழக ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் பிச்சாண்டி கூறியதாவது:

அரசு உதவி பெறும் கல்லூரி, உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, கல்லூரி கல்வி இணை இயக்குனர் தலைமையிலான குழு தேவையில்லாதது. இந்த ஆய்வு குழு ஏற்படுத்தும் தாமதத்தால், பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் நிலவுகிறது.

பெரும்பாலும் அரசாணை வெளியான, 10 நாட்களுக்குள், காலி பணியிடம் நிரப்பப்பட்டு விடும். ஆனால், ஓராண்டாகியும் இதுவரை பணியிடங்களை நிரப்புவதில் இழுபறி நிலவி வருகிறது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நியமனம் முறையாக நடைபெற, தமிழ்நாட்டு தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது போல, அரசு உதவி பெறும் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களையும், டி.ஆர்.பி., மூலம் அரசு நிரப்ப வேண்டும். இவ்வாறு, பிச்சாண்டி கூறினார்.

1 comment:

  1. இது ஒன்றும் புதிதல்ல. 03.06.2010 அன்று அரசாணை வெளியடப்பட்டும் 3ஆண்டுகள் நிறைவான பின்பும் 1743 இடை நிலை ஆசிரியர்களின் பதிவு மூப்பு அடிப்படையிலான பணியிடங்களை நிரப்பாமல் அரசு இழுத்தடித்து வருகிறது. காலம் தான் பதில் சொல்லும்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.