Pages

Saturday, June 15, 2013

சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மாணவர்கள் கையில் உள்ளது: அப்துல் கலாம்

"இன்றைய மாணவர்கள் தொலைநோக்கு பார்வை உடையவர்கள். அவர்கள் கையில்தான் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் உள்ளது" என, அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அப்துல்கலாம் பேசினார்.
திருவள்ளூர், பெரியபாளையம் ஜெ.என்.என்., பொறியியல் கல்லூரியின் முதலாம் பட்டமளிப்பு விழா சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் 205 மாணவர்களுக்கு பட்டமளித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது:

"விஞ்ஞானத்திற்காக மாணவர்கள் அயராது பாடுபட வேண்டும். அதில், வரும் தடைகளைக்கண்டு பயப்படாமல் வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும். தற்போது, விஞ்ஞான வளர்ச்சி சமூகத்திற்கு, பல்வேறு வகையில் உதவி புரிகிறது. இதனை சமூக முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளோம்.

இன்றைய மாணவர்கள் தொலை நோக்கி பார்வை உடையவர்கள். அவர்கள் கையில் தான், சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் உள்ளது." இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.

விழாவில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜாராம், முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர், ஜெ.என்.என்., கல்லூரி தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இரத்த புற்று நோயுடன் வந்த மாணவர்: திருத்தணி, பொதட்டுப்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன், ஜெ.என்.என்., பொறியியல் கல்லூரியில், பி.டெ.க்., ஐ.டி., படித்து முதல் மாணவராக பட்டம் பெற்றார். இவருக்கு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன், இரத்த புற்று நோய் வந்து அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் உதவியுடன் வந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் பட்டம் பெற்றது, பார்வையாளர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

சென்னை, நுங்கம்பாக்கம், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லூரியில் அப்துல் கலாம் பேசியதாவது:

"நம் நாட்டில், 60 கோடி பேர் இளைஞர்கள். எனவே, அரசியல், வியாபாரம், சமூகம் உள்ளிட்ட அனைத்திலும் இளைஞர்கள் பங்கு அவசியமாகிறது. அனைத்து துறைகளிலும் இளைஞர்கள் முன்னேற, லட்சியம் அவசியம்.

விடாமுயற்சியுடன், பிரச்னைகளை சமாளிக்கும் திறமை இருந்தால், யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம். உறக்கத்தில் வருவதல்ல கனவு; உங்களை உறங்க விடாமல் செய்வது தான் கனவு." இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.